காகிதங்களை மடித்துச்செய்யும் எண்ணிலாத தாளுருவங்களில் ‘காகிதக்கொக்கு’ என்பதுமட்டும் அமைதிக்கான ஒற்றைக்குறியீடாக உலகமுழுதும் நீள்கிறது. ஹிரோஷிமாவின் குழந்தை சடாகோ சசாகியின் உயிர்மறைவு, உலக அமைதிக்கான உச்சமலராக அவளை மானுட உள்ளங்களில் ஆழப்பதிந்திருக்கிறது. துண்டுக்காகிதத்தில் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி நூலிடைவைத்து மாலையாக்கி அனுமார்சிலைக்கு அணிவிப்பது முந்தைய தலைமுறையின் பழமைவழக்கு. அதுபோல, ஜப்பானிய தேசத்தின் பிரார்த்தனை வடிவம்தான் ஓரிகாமி-காகிதக்கொக்கு. காகிதம் மடித்து ஆயிரம் கொக்குகள் செய்தால், உடற்பிணி நீங்கி ஆயுள்நீளுமென்பது அம்மண்ணின் மரபியல்பு.
காகிதக்கொக்குகள் – ஓரிகாமி கற்றல்புத்தகம் முழுக்க வண்ணப்பக்கங்களினால் ஆன வடிவமைப்போடு, சடாகோ சசாகியின் வாழ்வுவரலாற்றையும், அவள்செய்த பிரார்த்தனைப்பறவையை காகிதம்மூலம் மடிக்கக் கற்றுத்தரும் வரைபடங்களையும் வாக்கியவரிகளையும் தாங்கிவருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஜப்பானிய குறியீட்டுவடிவங்கள் அச்சுப்பதித்த ‘சியோகாமி வண்ணக்காகிதங்கள்’ எனப்படும் வரைகலை அச்சுத்தாள்களை அதிகளவில் பின்னிணைப்பாகக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் எளிதாக கிழித்து மடிக்கும்படி ‘கிழிதுளை’கள் அழுத்தப்பட்டதாக இருக்கின்றன இவ்வண்ணக்காகிதங்கள்.
ஓரிகாமிக் கலைஞர் தியாகசேகர் அவர்களின் ‘கொக்குகளுக்காகவே வானம்’ என்கிற புத்தகத்தை தொடர்ந்து இரண்டாவது புத்தகமாக ‘காகிதக்கொக்குகள்’ தன்னறம் நூல்வெளியின் வாயிலாக பதிப்படைந்து வருகிறது. குழந்தைகளுக்கான பிறந்தநாள் அன்பளிப்பாக, பாராட்டுப்பரிசாக, நிகழ்வுகளின் கையளிப்பாக என நிறையவிதங்களுக்கு உதவும் புத்தகமாக இது வடிவப்பட்டுள்ளது. சியோகாமி காகிதங்களின் அச்சுவடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முதற்நூலாகவும் ‘காகிதக்கொக்குகள்’ தன்மைகொள்கிறது.
குழந்தைகள் மடித்துச்செய்து அனுப்பும் ஆயிரம் பிரார்த்தனைக்கொக்குகளை, உலக அமைதிப்பூங்காவாக உள்ள சடாகோ சசாகியின் நினைவிடத்துக்கு கொண்டுசேர்க்கும் ஒரு எளியகனவின் சாட்சியாகவே இந்த காகிதக்கொக்குகள்’ புத்தகம்.
Be the first to rate this book.