இலக்கியம் என்பது அதற்குள் ஈடுபடுத்திக் கொண்டவர்களது தகுதிக்குத் தக்கபடி தன்னை மேலான நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது.
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் அத்தனை பேரும் கலைஞர்களாக இருப்பதில்லை. அப்படி இல்லாதவர்களுக்கு அவரவர் நிலையிலிருந்து ஆழமாக நேசித்துக் கடப்பதுகூட அற்புதமான கலையாகவும் இருக்கக்கூடும். அந்த நேசிப்பை வடிவமாகக் காணும்போது அதிலிருந்து கடந்தவர்களால் இன்னும் சிலாகிக்க முடியும். தன்னையும் கலை வடிவத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்ள முயன்றிருக்கலாம். அல்லது தவிப்பாகி அடங்கியும் இருக்கும். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கையில் எனக்குள்ளும் அந்த உணர்வும், தவிப்பும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கவிதைகள் வாசிப்பதைக் காட்டிலும் முக்கிய வேலைகள் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, என் பொறுப்பை கவனப்படுத்தியது இந்தக் கவிதைகள். அகிலா கிருஷ்ணமூர்த்தியின் கவிதைகள் குறிப்பிட்ட எந்தச் சட்டகத்திற்குள்ளும் அடக்க முடியாததாக இருக்கிறது. அன்பு, விழுமியங்கள், அரசியல், சாதி ஆணவம், பெண்ணியம், பகுத்தறிவென பேசியிருக்கும் விசயங்களில் தர்க்கம் செய்ய முடியாத. தனித்துவமானக் கருத்துகளை விதைத்திருக்கிறார்.
குறியீடாகச் சொல்லியிருப்பதிலும், அதிகாரத்தை நோக்கி நேரடியாக நீதியைக் கேட்கையிலும், 'கவிதை என்பது தீக்குச்சி முனையில் திரண்டிருக்கும் நெருப்பு' என்று அவரது முன்னுரையில் சொல்லியிருப்பதைப் போல அத்தனை வரிகளையும் பற்றவைத்திருக்கிறார். 'எங்கள் பெயர்களை சாட்சியங்களோடு எழுதிக்கொள்ளுங்கள்' என்கிற கவிதை வரியில் கங்குகள் கனன்று கொண்டிருக்கின்றன. கையறு நிலையில், 'இரத்த விளார் இரணங்களை ஆறவிடாதே. உப்புக்கல் உரசு' என்று இரண காரணனை நோக்கி வளரி வீசுகிறார். அல்லது வீசச் சொல்கிறார். அந்த ஆயுதம் எத் திக்கும் பாய்கிறது. யார் யாருக்காக, யார்யாரையெல்லாம் நோக்கிப் பாய்கிறது என்பதை கவிதைகளை வாசித்துத் தெரிந்துகொள்வதற்கு உங்களுக்கு இடமளிக்க விரும்புகிறேன்.
இலக்கியப் பரப்பில் அகிலா கிருஷ்ணமூர்த்தி இலக்கியத் திறனாய்வு, கவிதைகள், கதைகள், கட்டுரைகளென இயங்கக்கூடியவர். அவரது எழுத்துகள் நம்பிக்கையளிக்கக்கூடியன.
Be the first to rate this book.