‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போது, வெற்றி அடைய முடியாமல் போராடித் தோற்றுப் போன ஒருவனின் விரக்தியான சப்பைக்கட்டு மாதிரிதான் அந்த வரிகள் தோன்றும். ஆனால், இதே கருத்தைத்தான், பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்களை விவரித்து, இந்த நூலில் ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் மால்கம் க்ளேட்வெல்.
பிரபலமானவர்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கு கடின உழைப்போ, அறிவுக்கூர்மையோ, அதிர்ஷ்டமோ மட்டும் காரணமல்ல என்பதை அலசி ஆராய்ந்திருக்கிறார். உலகத்தின் மிகச் சிறந்த சாதனையாளர்கள், அசாத்திய புகழ் பெற்ற இசைக்குழுவினர், சாதனைகள் பல படைத்த ஸ்போர்ட்ஸ் டீம்... என்று ஏராளமான வெற்றிக் கதைகளை தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் மால்கம் க்ளேட்வெல். சாஃப்ட்வேர் சூப்பர் மேன் பில்கேட்ஸையும் விட்டுவைக்க வில்லை. கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிற உள்ளுணர்வும், வெறியும் வெற்றியாளர்களின் ரத்தத்தில் இருப்பது நிஜம். ஆனால், அதே வாய்ப்பும் அதே சூழலும் அமைந்திருந்தால் இன்னும் பத்தாயிரம் பில்கேட்ஸ்கள் உருவாகியிருப்பார்கள் என்று காரண காரியத்தோடு விவரித்து, நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறார்.
‘OUTLIERS' என்ற ஆங்கில நூலை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ‘அவுட்லயர்ஸ்’ என்பதை, தமிழில் ‘தனித்து நின்றவர்கள்’ என்று சொல்லலாம். தனித்த வாய்ப்புகளும், சூழலும் அருளப் பெற்றவர்களுக்கு இந்த நூல் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
Be the first to rate this book.