இன்று ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்குப் பெரும் தடையாக இருப்பது அரசியல் இஸ்லாம். ஆனால் இஸ்லாத்தின் இயல்பையும் ஒடுக்குமுறைக்கு எதிரான அதன் போர்க்குண வடிவங்களையும் அது இன்று அரசியல் இஸ்லாமாக உருவெடுக்கக் காராண மாக இருந்த சிந்தனையாளர்களையும் பற்றி புரிந்துகொண்டவர்கள் வெகுசிலரே.
இந்த நூலில் அனஸ் அசதபாத்தில் பிறந்த செய்யிது ஜமாலுத்தீன் ஆப்கானி எவ்வாறு தமது புரட்சிகர இஸ்லாமிய இயக்கச் சிந்தனை மூலம் மேற்கத்திய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினார் என்னும் கதையை விவரிக்கிறார்.
அத்துடன் ஆப்கானி இஸ்லாமியக் கோட்பாடுகளூக்கு மனித வாழ்க்கைக்காக மறுவிளக்கமளித்ததோடு சமயத்தையும் அரசியலையும் மனித விடுதலைக்கான முக்கிய விசையாக எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.
இதை அனஸ் நவீன சிந்தனையையும் சமய புத்துயிர்ப்பையும் ஆப்கானி எவ்வாறு கையாண்டார் என்பதில் தொடங்கி, இஸ்லாத்தையும் இஸ்லாமிய அகிலத்தையும் ஒருங்கிணைப்பதில் அவர் வைத்த நம்பிக்கை, சமூகத்தை அரசியல்மயமாக்குதல், ஜனநாயகப்படுத்துதல், சமூக மாற்றங்களையும் மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக வெகுமக்கள் எழுச்சியையும் ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் பயன்படுத்துதல் போன்றவற்றினூடாக விவரிக்கிறார். அதேவேளை ஒற்றை இஸ்லாமிய அரசிலும் இஸ்லாமிய சட்டத்திலும் ஆப்கானிக்கு இருந்த விமர்சனத்தையும் முன்வைக்கிறார்.
இதன்மூலம் இந்நூல் ஆப்கானியின் தத்துவம் எவ்வாறு சமயத்தை பகுத்தறிவு மூலமாக அணுகுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை விளக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சமயத்தின் பங்கு பயன்பாட்டு வாதமும் செயல்பாட்டுப் பார்வையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறது.
இதனால்தான் அரசியல் புரட்சிக்கும் இஸ்லாமிய கொள்கைக்கு அழுத்தம் தருபவர்களுக்கும் ஆப்கானியின் கருத்துகள் இன்றும் ஏற்புடையாதாக இருக்கின்றன. இதுவே இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
Be the first to rate this book.