எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.
விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் அலஹாபாதில் நடந்த மாநாடு.
இயக்கத்தின் அழைப்பும் செய்தியும் தொடக்கத்திலிருந்தே பெண்களையும் பெரும் அளவில் ஈர்த்தும் இயக்கியும் வந்துள்ளன என்பதற்கு இயக்கச் சகோதரி ஒருவரின் ஒரு மாத செயல் அறிக்கையே சான்று. எட்டு பக்கங்களில் நீள்கின்ற இந்த அறிக்கை தருகின்ற செய்திகள் ஏராளம், ஏராளம். மதச் சார்பற்றக் கல்வி கற்றவர்கள் இயக்கத்தை எப்படிப் பார்த்தார்கள், அவர்கள் மத்தியில் இருந்த ஐயங்களை இயக்கத் தலைவர்கள் எவ்வாறு தீர்த்தார்கள் என்பது பற்றிய விவரங்களை அப்படிப்பட்ட சகோதரர் ஒருவர் எழுதிய கடிதமும் அதற்கு ஜமாஅத் தலைவர் அளித்த பதில் கடிதமும் சுவையாக விவரிக்கின்றன.
ஜமாஅத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரையும் இயக்கப் பணியில் ஈடுபடுத்திக்-கொள்கின்ற நோக்கத்துடன் ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற தனிப்பட்ட திறமைகள், ஆற்றல்கள், ஆர்வங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு துறைகளில் களம் இறக்குவதற்காக இலக்கியம், இதழியல், மொழிபெயர்ப்பியல், சட்டம், வரலாறு, தத்துவம், பொருளியல், அரசியல் என இருபத்தைந்து துறைகளுக்காகத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்கிற செய்தி சிந்திக்க வைக்கின்றது.
மொத்தத்தில் இந்த நூல் அனைவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணமாக, வழிகாட்டுதல்களையும் அறவுரைகளையும் அள்ளித் தருகின்ற கருத்துப் பெட்டகமாக, ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்ற சரித்திரக் குறிப்புகளைக் கொண்ட பதிவேடாக மிளிர்கின்றது.
Be the first to rate this book.