ஒரு ஏப்ரல் மாதத்தில் அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசப் பிரிவினைக்கும் விடுதலைக்கும் முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.
இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், உள்ளத்தை உலுக்கிவிடுகின்ற ஜும்ஆ உரை, செயல் அறிக்கைகள் மீதான கருத்துரைகள் என விறுவிறுப்பாக நடைபெற்ற மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல்.
தனிமனித சீர்திருத்தம், சமூகக் கட்டமைப்பு, அரசமைப்பு என்கிற முப்பெரும் பரிமாணங்களில் செயலாற்றி வருகின்ற ஜமாஅத்தே இஸ்லாமி என்னதான் விரும்புகின்றது? இந்த நாட்டில் அது எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது? மக்களிடம் ஜமாஅத் முன் வைக்கின்ற செய்தி என்ன? எதன் பால் அது மக்களை அழைக்கின்றது? அதனை அடைவதற்காக அது எத்தகைய வழிமுறைகளையும் செயல்முறைகளையும் மேற்கொள்கிறது?
- என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கின்றது இந்நூல்.
முஸ்லிம் என்றால் யார் என்பதன் மூன்றாவது பரிமாணத்தையும் இந்நூல் விவரிக்கின்றது.
அந்த மூன்றாவது பரிமாணம் ஏற்படுத்துகின்ற அதிர்வும் தெளிவும் இனிமையானவை! மனத்தை லேசாக்கிவிடுபவை! சுவனத்திற்குச் செல்கின்ற பாதையில் மண்டிக் கிடக்கின்ற பனிமூட்டத்தை விரட்டியடிப்பவை! மனத்தை ஒருமுகப்படுத்துபவை!
இஸ்லாமிய இயக்கத்தின் ஒழுக்க அடித்தளங்களையும் இந்நூல் விவரிக்கின்றது. இஸ்லாமிய இயக்கம் அடைய வேண்டிய இறுதி இலக்கைத் தெளிவுபடுத்துகின்ற அதே வேளையில் அதனை அடைவதற்காக எத்தகைய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மௌலானா விளக்கியுள்ள விதம் உங்களின் சிந்தையையும் கருத்தையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.