சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக்கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டுவிடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து நாலு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டான் என்பது போன்ற சிரமமான வாக்கியங்களை இந்தியில் கற்றுக் கொள்வதால் கன்னையாலாலுக்குக் கொல்லைக்குப் போகுமே தவிர இவர்களுக்கு குறிப்பிட்ட பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மும்பையில் வேலை கிடைத்துப் போனால்? போனால் என்ன? அங்கே பெட்டிக் கடையில் வாழைப்பழத்தைக் காட்டிக் கேட்டால் எடுத்துக் கொடுக்க மாட்டானா? என்னத்துக்கு கன்னையாவை இழுக்கணும்?
Be the first to rate this book.