இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் ஃபலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் மிக முக்கியமான புத்தகம். இஸ்ரேலைக் கட்டமைக்க உதவிய ‘கட்டுக்கதைகளும்’, தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் ஃபலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறையை நிலைநிறுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கிடும் மதிப்புமிக்க கருத்தாயுதம்.
ஃபலஸ்தீன் மீதான காலனிய ஆக்கிரமிப்பின் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெளியிடப்பட்ட முன்னோடியான இந்தப் புத்தகத்தில், துணிச்சல் நிறைந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலான் பப்பே, சமகால இஸ்ரேலின் தோற்றம் பற்றியதும் அடையாளம் பற்றியதுமான மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.
பப்பே ஆராய்ந்துள்ள இந்தப் ‘பத்து கட்டுக்கதைகளும்’ ஊடகங்களில் திரும்பத்திரும்ப முடிவின்றிச் சொல்லப்படுபவை, இராணுவத்தால் செயல்படுத்தப்பட்டவை, உலக நாடுகளின் அரசாங்கங்களால் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டவை, அந்தப் பிராந்தியத்தின் அநீதியான தற்போதைய நிலையை அப்படியே நிலைத்திருக்கச் செய்பவை.
‘ஃபலஸ்தீனம் யூதர்களின் பூர்விக பூமி; ஆனால் பால்ஃபோர் பிரகடனத்தின்போது அது ஆளில்லாத வெற்று நிலமாக இருந்தது’ என்ற வாதம் தொடங்கி, இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் ஸியோனிசத்தின் பங்கு என்னவாக இருந்தது என்பது வரை ஆராய்கின்றார். 1948ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் விட்டுத் தாமாக முன்வந்து வெளியேறினார்களா என்ற கேள்வியை முன்வைக்கும் அவர், 1967 போர் ‘வேறு வழியில்லாமல்’ இஸ்ரேல் நடத்திய போர்தானா என்றும் கேள்வியெழுப்புகின்றார். கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களின் தோல்வியைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதைகளைக் குறித்து விவாதிக்கும் பப்பே, ‘இரு நாடுகள்’ தீர்வு ஏன் சாத்தியமற்றது என்பதை விளக்குகின்றார்.
Be the first to rate this book.