வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பது இஸ்லாம் நம்மிடம் வாங்குகின்ற உறுதிமொழி. ஒருவரை உண்மை இறைவனாகிய அல்லாஹ்வுடன் உள்ளத்தால் தொடர்புபடுத்துகின்ற அடித்தளம் இதுவே. அடுத்து இதன்மீது கட்டியெழுப்புகின்ற உயிரோட்டமான, உன்னதமான, புனிதமான வாழ்க்கைத் தூண்கள்தான் இஸ்லாமிய வழிபாடுகள். தண்ணீர், அதன் பாத்திரம், உடல், உடை, இடம் போன்றவற்றின் தூய்மையிலிருந்தே வழிபாடு தொடங்கிவிடுகிறது. கண்விழித்து பல் துலக்கி, கழிவறைக் கடமைகளை முடிப்பதோடு, குளிப்பும் கடமையாகியிருந்தால் அதையும் நிறைவேற்றுவது நமக்கு வழிபாடு. இந்தப் புறத்தூய்மையின் வாசல் வழியே அகத்தூய்மைக்கான வழிபாட்டில் நுழைகிறோம். அதுதான் தொழுகை. இந்த வழிபாடு அல்லாஹ்வுடனான நேசத்தில் வாழ்க்கையைக் கட்டிப்போடுகிறது. இரட்சகன் விரும்புகிற வாழ்க்கையை வாழ நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் நமது சம்பாத்தியம்கூட அவனுக்குப் பிடித்த முறையில் இருக்க தீர்மானம் கொள்கிறோம். இல்லையென்றால், நமது தானதர்மத்திற்கும் அவனிடம் நற்கூலி கிடைக்காது என்று தெரிந்துவைக்கிறோம். ஸகாத் வழிபாடு நமது ஒட்டுமொத்த பொருளாதார உழைப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. அதே சமயம், நமது உணவும் குடிப்பும் உடல் இச்சைகளும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. அதுதான் நோன்பு. தடையை மீறாத இறையச்சத்தின் ஆதார வழிபாடு இது. இப்படியான முஸ்லிம் வாழ்க்கையில் ஹஜ்ஜு வழிபாடு உச்சகட்டத்திற்கு அவரைக் கொண்டு செல்கிறது. நெஞ்சைப் பிழியும் இறைநெருக்கம் கொண்ட இந்த வாழ்க்கை முறைதான் இஸ்லாமிய வாழ்வியலின் இரத்த ஓட்டம். இதற்கான கல்விதான் ஒவ்வொரு மனிதனும் தேர்ச்சி பெற வேண்டிய அடிப்படைக் கல்வி. ஏனெனில், இது அன்றாட வாழ்வில் அனுதினமும் செயல்முறைக்கு அத்தியாவசிமானது. ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலை இதற்கான நறுமணப் புட்டியாக வழங்கியிருக்கிறார்கள். வழிபாடுகளின் வாசனை கமழும் இந்நூலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் நமக்குச் சிறகுகளைத் தந்து வழிகாட்டுகின்றன.
Be the first to rate this book.