அபூஉபைதா மக்களை அழைத்து, “யார் அந்த மடாலயத்திற்குச் செல்வது?” என்று வினவியபொழுது, அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் துள்ளிக் குதித்து எழும்பி, “நான்தான் இந்தப் பயணத்தின் முதல் ஆளாக இருப்பேன்” என்று கூறினார்.
அபூஉபைதா அகமகிழ்ந்தார். இப்னு ஜஅஃபர் தலைமையின் கீழ் ஒரு படையைத் திரட்டி, “ஓ அல்லாஹ்வின் தூதரின் உறவினரே, நீர்தான் இந்தப் படையின் தளபதி” என்று கூறினார்.
ஒரு கறுப்புக் கொடியை இப்னு ஜஅஃபரிடம் அளித்தார் அபூஉபைதா. இப்னு ஜஅஃபர் தலைமையில் 500 குதிரைப் படைவீரர்கள் கொண்ட அந்தப் படையில் பத்ரில் கலந்து கொண்ட நபித்தோழர்களும் உண்டு.
இந்த 500 பேரும் அதிகமான போர்க்களங்களைச் சந்தித்தவர்கள். யுத்தத்தின் மையப் பகுதி வரை சென்று தைரியமாக ஊடுருவும் தீரர்கள். அவர்கள் ஒருபொழுதும் போர்க் களத்தில் புறமுதுகு காட்டி ஓடியதில்லை.
அவர்கள் அனைவரும் இப்னு ஜஅஃபரின் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்ததும் அபூஉபைதா, “அல்லாஹ்வின் தூதரின் மகனாரே, முதல் நாள் சந்தை முடியும் வரை தாக்குதல் நடத்த வேண்டாம்” என்று கூறி, அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினார்.
ஹிஜ்ரி 14 ஷஅபான் பிறை 15 அன்று முழுநிலவு வெளிச்சத்தில் அவர்கள் டமஸ்கஸிலிருந்து அபூ அல் குத்ஸ் மடாலயம் நோக்கி புறப்பட்டார்கள்.
(நூலிலிருந்து)
Be the first to rate this book.