`சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன் இவன்தான். இந்தக் குலோத்துங்கச் சோழனின் இளமைக் கால சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவல் இது.
மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் ஏற்பட்ட சோழ - சாளுக்கிய திருமண உறவின் வழிவந்த சாளுக்கிய ராஜேந்திரன், வேங்கி நாட்டை அரசாட்சி செய்து கொண்டிருக்கும்போது அங்கு சாளுக்கியர்கள் ஏற்படுத்திய அரசியல் கலகங்களால் அரசாளும் உரிமையை இழக்கிறான். பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் வரும் சாளுக்கிய ராஜேந்திரன், தன் மாமன் இரண்டாம் ராஜேந்திர சோழனால் `அநபாயச் சோழன்' என்ற பெயர் பெறுகிறான். தன் மருமகன் அநபாயனுக்காக இரண்டாம் ராஜேந்திர சோழனும் அவரின் மகனும் வேங்கி நாட்டின் மீது போர் தொடுக்கின்றனர். இதை வரலாறு `கொப்பம் போர்' என்கிறது. சாளுக்கியர்களை விரட்டிவிட்டு வேங்கி நாடு மீட்கப்படுகிறது.
ஆனாலும் வேங்கி நாட்டை ஆளும் உரிமையை அநபாயன் பெறவில்லை. யாருக்கு அரசுரிமை கிடைக்கிறது, அநபாயச் சோழன் மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஏன் அழைத்துவரப்படுகிறான் என்பதை விறுவிறுப்பான மொழிநடையில் சுவை குழைத்துச் சொல்லி யிருக்கிறார் நூலாசிரியர். வரலாற்று மாந்தர்களும் நூலாசிரியரின் கற்பனை மனிதர்களும் கைகோத்து நடந்து, வாசிப்பவர்களை வரலாற்றுக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றனர். இனி, இருமுடிச் சோழனோடு உலா வாருங்கள்!
Be the first to rate this book.