நாகரிகம் இல்லாதவர்கள். அசுத்தமானவர்கள். காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாகச் சுற்றித் திரிபவர்கள். பாம்பு, பூனை, குரங்கு என்று கையில் எது அகப்பட்டாலும் அடித்துச் சாப்பிட்டுவிடக்கூடியவர்கள். கல்வியறிவு இல்லாத காட்டுமிராண்டிகள். பழங்குடிகள் பற்றி பொதுவாக நிலவும் கருத்துகள் இவை.
இருளர்களின் பிரத்தியேக உலகத்துக்குள் ஒருமுறை பிரவேசித்துவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் எத்தனை காட்டமானவை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதா? பாம்பு சம்பந்தமான ஆராய்ச்சியா? மருத்துவ உபயோகத்துக்காக விஷம் தேவைப்படுகிறதா? கூப்பிடு இருளர்களை!. இதுவரை இங்கே நிகழ்த்தப்பட்ட அத்தனை பாம்பின ஆராய்ச்சிகளிலும் இருளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
பிறரது நிலங்களில் இருளர்கள் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும் எதற்காகவும் தங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரும் நாட்டம் இல்லை இவர்களுக்கு. பசியால் கதறியழும் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாததால் உயிருடன் குழந்தையைப் புதைத்த இருளர் இனப் பெண்கள் இங்கே உண்டு. பெண்களைக் கொண்டாடும், பெண்மையைப் போற்றும் மரபு அவர்களுடையது. காதல் திருமணம் சர்வ சாதாரணம். இசை மீது தீராத மோகம். சிறிதளவே இருந்தாலும் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் தோழமை. பிறர் உடைமை மீது நாட்டம் கிடையாது. அசாதாரணமான இறை பக்தி. கூர்மையான அறிவாற்றல். கொடிய விலங்குகளையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் இருளர்கள், நாகரிக மனிதர்களைக் கண்டால் மட்டும் அஞ்சி பின்வாங்குகிறார்கள்.
இருளர்களின் அசாதாரணமான வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.