சென்னை மாநகரம் கடலோரக் கிராமத்திலிருந்து உருவானதிலிருந்து தொடங்குகிறது இந்நூல். சென்னைப் பட்டணம் தோன்றிய வரலாறாக இல்லாமல் சென்னையைக் களமாகக் கொண்டு நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் சென்னைக்கு சிறப்பு சேர்த்த அறிஞர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் அறிஞர்கள், கலைஞர்கள், இசைவாணர்கள், மக்கள் தலைவர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கலை – கலாச்சார அமைப்புகள் தொடர்பான தகவல்களாகவும் நூல் அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
1900-லிருந்து முக்கியச் சம்பவங்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை, ‘தமிழ் மாது’ பத்திரிகை ஆசிரியர் கோ.ஸ்வப்பநேஸ்வரி, தமிழ்த் தாத்தா உ.வே.சா. தொடர்பான குறிப்புகள் ரசமானவை. ‘லோகோபகாரி’, ‘தேசபந்து’, ‘திராவிடன்’, ‘இந்தியா’ முதலிய இதழ்களில் துணையாசிரியராக இருந்த நாரண.துரைக்கண்ணன் ‘ஆநந்த போதினி’, ‘பிரசண்ட விகட’னுக்குப் பிறகு ஆசிரியரானதும் சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை எழுதியதையும் அறிய முடிகிறது. ‘இந்தியன் கணிதச் சங்கம்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஒரு மாணவர் தொடங்கியதும், அவர் பேராசிரியராக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் அமெரிக்கர்கள் அவருக்கு ‘புரொஃபஸர்’ என்று அடைமொழியிட்டுக் கடிதம் அனுப்பியதும் சுவை மிக்கது.
அயோத்திதாசர் பிறப்பு தொடங்கி, அவரது முக்கியமான முன்னெடுப்புகள், இதழியல் பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இந்நூலில் உண்டு. பெரும் கவனம் பெறாத சிறுசிறு இதழ்கள் குறித்த விவரங்களும், அரசியல் கட்சிகள் தொடர்பான விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 1909-ல் சுப்பிரமணியம், புருசோத்தம நாயுடு ஆகிய இருவரும் ‘சென்னை பிராமணரல்லாதார் சங்கம்’ அமைப்பைத் தொடங்கியது, வள்ளலாரின் கொள்கையைப் போற்ற ‘சமரச சன்மார்க்க சங்கம்’ நிறுவிய மறைமலையடிகள் தொடர்பான விவரங்கள், சென்னையின் மிக முக்கியமான கட்டிடங்கள் உருவான கதை என இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மிக முக்கியமான தகவல்கள் எல்லாமும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலிலுள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க சுவாரஸ்யம் தருவதாக இருக்கின்றன. ஒவ்வொரு துணுக்கையும் படித்து முடித்ததும் அந்நாளைய நினைவுகளில் மூழ்குவது நிச்சயம்!
Be the first to rate this book.