இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு எதிராக காந்தி தொடுத்த உண்ணாவிரதப் போர் உலக அரங்கில் நம் தேசத்தின் மதிப்பைக் கூட்டியது. ஆனால், இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மணிப்பூரைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா பிரகடனம் செய்திருக்கும் உண்ணாவிரதப் போர் இந்தியாவைத் தலைகுனிய வைத்துள்ளது.
ஒரு தேசத்து ராணுவம், ஆக்கிரமிக்க வரும் இன்னொரு தேசத்து ராணுவத்துடன் போரிடும்போதுகூட சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படவேண்டும். ஆனால், மணிப்பூரில் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு ராணுவம் கொடூரச் செயல்களைச் செய்துவருகிறது. யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம். சித்ரவதை செய்யலாம். கொல்லலாம். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் ராணுவத்துக்கு அளவற்ற அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரி ஐரோம் ஷர்மிளா தன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நீடித்து வரும் யுத்தம் இது.
ஓர் அரசாங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர், ஷர்மிளாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் உரையாடி இந்த வீர வரலாறை எழுதியிருக்கிறார். அத்துடன், மணிப்பூரின் சமகால அரசியல் மற்றும் சமூக வரலாறாகவும் இந்நூல் பரிணமிக்கிறது.
Be the first to rate this book.