மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள்தான் நியூட்டனை எழுப்பியது. புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்து அறிவிக்கிற அறிவாளியாக அவரை உயர்த்தியது. ஆப்பிளால் உருவான நியூட்டனைப்போல், ஆப்பிளை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ‘எனக்கு ஆப்பிள் வேண்டும்’ என்று உலகத்தையே ஏங்க வைத்தவர். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் அவ்வளவு தரம் வாய்ந்தவை. டிஜிட்டல் உலகத்தின் கடவுளாகக் கொண்டாடப்படுகிற அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் புதிய புதியக் கண்டுபிடிப்புகள் உலகையே வியக்கவைத்தன. சராசரி மனிதர்களைப்போலவே ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையிலும் முரண்பாடுகளும், சறுக்கல்களும் அதிகமாகவே இருந்தன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய குறைகளுக்கும் அவரிடத்தில் பஞ்சம் இல்லை. ஆனாலும், உலகத்தின் கவனத்தைத் திருப்பிய சாதனையாளராக அவர் நின்றார்; வீழ்ச்சிகளைக் கடந்தும் அவர் வென்றார். அவருடைய சாதனைகளை மட்டுமே பட்டியலிடாமல், அவருடைய சராசரி குணங்களையும், சறுக்கல்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை என்கிற நிலையில், ‘குறை ஒரு குறை அல்ல... ஒருமித்த சிந்தனையும் அயராத உழைப்பும் நம் குறைகளைக் களைந்து, ஆகச்சிறந்த சாதனைக்கு நம்மை உரித்தாக்கும்’ என்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை மூலமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கும் டிஜிட்டல் உலக ஆர்வலர்களுக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை அற்புதமான பாடம். ஒவ்வொரு மனிதரையும் உயர்வை நோக்கி உசுப்பேற்றும் விதமான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை நிச்சயம் உங்களையும் நம்பிக்கைகொள்ள வைக்கும்!
Be the first to rate this book.