நடுநிசியில் அம்ரீக் சிங்குடைய மனைவியின் கற்பனையில் பள்ளிவாசலின் கிணறு அச்சம் மிகுந்த ஏப்பவொலியாக உருவெடுக்கும்போது அவளுடைய வயிற்றில் வளரும் வீரமிக்க படை கூச்சலிடத் தொடங்கிவிடும். சில நேரம் அவளுடைய காதுகளில் கிணற்றின் பிளிறல் இதயத்தைக் கீறுவதுபோல எதிரொலிக்கும். சில நேரம் கிணற்றின் வாய், தாடைகளைப் பிளந்துகொண்டு தன்னை நோக்கி வருவது போலவும் தோன்றும். ‘முல்லா அலீ பக்ஷ் கிணற்றுச் சுவர்களில் ஊர்ந்தவராக வெளியே வந்து கண் சிமிட்டுவதற்குள் கிணற்றின் மேற்பகுதியில் நின்று பாங்கொலியின் மூலமாக எப்போது சூனியம் செய்துவிடுவாரோ?’ என்ற அச்சம் அவளுக்கு எந்நேரமும் இருந்தது.
- நாவலிலிருந்து ...
புகழ்பெற்ற உருது எழுத்தாளர். இன்று பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள கஷ்மீரில் 1917ம் ஆண்டு பிறந்தவர். 1941ம் ஆண்டு லாகூர் அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு பிரிட்டிஷ் இந்தியக் குடியியல் பணியில் சேர்ந்தார். தம்முடைய நிகரற்ற திறமையின் காரணமாக துணை ஆணையராகவும், தகவல் தொடர்புத்துறை செயலராகவும், அயல்நாட்டுத் தூதராகவும், இன்ன பிற பல்வேறு அரசுப் பொறுப்புகளிலும் செயலாற்றியவர். பாகிஸ்தானிய கவர்னர் ஜெனரல்கள் குலாம் முஹம்மது, இஸ்கந்தர் மிர்சா, அய்யூப் கான் ஆகியோரின் முதன்மைச் செயலாளராகவும் செயல்பட்டவர். பிற்காலத்தில் அரசுப் பணியைத் துறந்து ஐ.நாவின் யுனெஸ்கோவில் இணைந்தார். இறுதிக் காலத்தில் தம்மை ஸூஃபி மரபோடு இணைத்துக்கொண்டவர்.
குத்றதுல்லாஹ் ஷஹாப் நிறுவிய ‘பாகிஸ்தானிய எழுத்தாளர்கள் சங்கம்’ என்ற இலக்கிய அமைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் தனிச்சிறப்பு மிக்க இலக்கிய ஆளுமையாக அனைவராலும் போற்றப்பட்டார். உருது மொழியில் அவர் எழுதிய சுயசரிதை நூலான ‘ஷஹாப் நாமா’ மிகவும் புகழ்பெற்றது. அவருடைய பிற படைப்பிலக்கியங்களில் ‘இறைவா!’ அனைவராலும் அதிகமாகப் பேசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, பெரும் எதிர்ப்பிற்குள்ளான குறுநாவலாகும்.
குத்றதுல்லாஹ் ஷஹாப் தம்முடைய அறுபத்து ஒன்பதாம் வயதில் 1986ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி இஸ்லாமாபாத்தில் வைத்து மரணமடைந்தார்.
Be the first to rate this book.