இறைத்தூதர்களின் வாழ்க்கை பொதுமக்களுடன் இரண்டறக் கலந்தது. காட்டில் தவமிருந்து, தனிமையின் தியான உலகில் திளைத்திருந்து, குரலற்ற துறவு வாழ்க்கையில் தூங்கிக் கழித்தவர்கள் அல்ல அவர்கள். சந்திக்கு வந்து சீர்திருத்தம் பேசியவர்கள். சீரழிந்தவர்களின் எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் துணிந்தவர்கள். மக்கள் நன்மைக்கு நல்வழி காட்டிய மகராசன்கள். இதில் இவர்களுக்கும் உலகம் இதுவரை கண்டுள்ள சீர்திருத்தச் செம்மல்களுக்குமான முக்கிய வேறுபாடு, இவர்கள் அல்லாஹ்வின் நேரடி வழிகாட்டலில் இயங்கினார்கள் என்பதே. எனவேதான், ரசிகர் கூட்டத்தை உருவாக்காமல் இறைநேசர்களை உருவாக்கினார்கள். எந்த மனிதனும் தன் இறைவனை நெருங்க எந்தப் புரோகிதனும் தேவையில்லை என்று பாடம் நடத்தினார்கள். புரோகிதம் இணைவைப்பை உருவாக்குகிறது. தூதர்கள் புரோகிதத்தையும் இணைவைப்பையும் ஒரே குரலில் எதிர்த்தார்கள். அநீதியைத் தடுப்பதற்கு அவர்கள் முன்னெடுத்த தைரியமான பிரசாரம் இன்று மக்கள் பணியில் களமாடும் அனைவருக்கும் பல போதனைகளையும் படிப்பினைகளையும் முன்வைக்கின்றன. இறைத்தூதர்களின் வாழ்வை வெறும் கதையாகக் கேட்பதைவிட்டு அர்த்தம் நிறைந்த போதனையாக, இலட்சியப் பாதையின் படிக்கட்டுகளாக, சீர்திருத்தத் திட்டங்களின் செயல்வடிவமாக ஷெய்க் ஃபுஆது ஷல்ஹூபு இந்நூலில் விவரிக்கிறார்கள்.
Be the first to rate this book.