மனித இன வரலாறு என்பது உண்மையில் இறைத்தூதர்களின் வரலாறுகளைப் பேசுவதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆனால், குரங்குக் கதைகளைப் பேசுவதிலிருந்து தொடங்குவார்கள் நாத்திகக் கற்பனையாளர்கள். குரங்கிலிருந்து மனிதன் என்ற பொய்க்கதையை குரங்குகள் புனையவில்லை. மனிதன்தான் புனைந்திருக்கிறான். இதனூடாக முதல் மனிதர் ஆதம் (அலை) வரலாறு மறுக்கப்படுவது மட்டுமின்றி, இறைத்தூதர் எனும் அவரின் உயர்ந்த நபித்துவ அந்தஸ்தும் மறுக்கப்படுகிறது. இதுதான் இறைநிராகரிப்பின் இருண்ட வரலாற்றுப் பக்கங்களில் முதல் பக்கம். இறைவனுக்கும் மனிதனுக்கும் எந்தப் புள்ளியிலும் தொடர்பில்லாமல் ஆக்குதலே இந்தப் பக்கத்தின் முதல் தலைப்பு. ஆனால், இறைத்தூதர்கள் சரித்திரம் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பை வெளிப்படுத்திய இறைவனின் உறவைச் சொல்கின்றது. கூடவே, அந்த உறவைத் துச்சமாகத் துண்டித்தவர்களின் அழிவையும் சொல்கின்றது. பூகோளரீதியாக இதை மறுக்க இயலா புறச்சான்றுகளும் பரவிக் கிடக்கின்றன. இதில் இறைவனின் தூதுச்செய்திக்கும் மனிதர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர்கள் நபிமார்கள். சமூகவியல் சரித்திரத்தின் நாயகர்கள். ஏகத்துவப் பரப்புரையின் எழுச்சித் தலைவர்கள். ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்களை அதிகம் எதிர்கொண்ட வீரர்கள். அல்லாஹ்வைத் தவிர எதற்கும் அஞ்சாத தீரர்கள். இவர்களில் ஆதம் (அலை) முதல் முஹம்மது (ஸல்) வரையிலான குர்ஆன் நினைவூட்டும் தூதர்களின் ஆதாரப்பூர்வச் சரித்திரத்தை ஷெய்க் ஃபுஆது ஷல்ஹூபு இந்நூலில் தொகுத்தளித்துள்ளார்கள்.
Be the first to rate this book.