விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள்.
உடலின் ஆக்கபூர்வ சக்தி மையமாக இருக்கும் வயிற்றை, நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நூல் மிக அருமையாக விளக்கிச் சொல்கிறது. என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்பது தொடங்கி, உட்கொள்ளப்படும் உணவு எப்படி செரிமானமாகி சக்தியாக மாறுகிறது என்பது வரை வயிறு தன் வரலாறு கூறுவதுபோல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ‘இப்படிக்கு வயிறு!’ என்கிற தலைப்பில் டாக்டர் விகடனில் 30 இதழ்களாக இந்தத் தொடர் வெளியானபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு மகத்தானது. மருத்துவம் குறித்த விளக்கம் என்றாலே அது யாருக்கும் எளிதில் புரியாததாக இருக்கும் என்கிற கடந்தகால மரபுகளை உடைத்து, எளிய தமிழில் ‘வயிறு’ என்கிற உறுப்பே வரைந்த மடலாக & அதன் வாய்மொழி உரையாடலாக உருவாகி இருக்கும் இந்த நூல், மருத்துவ நூல்களில் தனித்த அடையாளத்தைக் கொண்டது.
கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளின் அன்றாட செயல்முறைகளை விளக்கி, செரிமானம் நடக்கும் விதத்தையும் அதற்கு உறுதுணையாக நாம் செய்யவேண்டிய கடைப்பிடிப்புகளையும் ஓர் ஆசானைப்போல் சொல்கிறது இந்த நூல். மேலும், குடல்வால், அல்சர், உணவு ஒவ்வாமை, அடிவயிற்று வலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் தெளிவாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் செல்வராஜன். வயிற்றின் வரலாற்றையும், அது செயல்படும் விதத்தையும், அதைக் காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லி சரியான நேரத்தில் நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல் இது!
Be the first to rate this book.