கடற்கரய்யின் `தான்’ கவிதையை வாசித்தவுடன் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களும் கொந்தளிப்புகளும் கொஞ்சமல்ல. உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், அவற்றின் உஷ்ணத்திலிருந்து வெளியேறவுமே எழுதுவதாக நம்பிக்கொண்டிருந்த எனக்கு, அவ்வரிகளின் அடர்த்தியை விளங்கிக்கொள்ள வெகுநாள் பிடித்தது. உண்மையில், எழுதி ஓர் உணர்ச்சியிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்வதைவிட அதே உணர்ச்சியில் உழல்வதே இயல்பானது. அவரே சொல்வதுபோல, `மொழி என்பது போதாமை. மெளனம் என்பதே நிறைவு’. இந்த மொழியும் மெளனமும் என்னவிதமான பாதிப்புகளைத் தருகின்றன என்பதை அருணகிரியாரின் `சும்மா இரு சொல் அற’ என்கிற பதத்திலிருந்து பற்றிக்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை கடற்கரய்யின் பல கவிதைகள், அருணகிரியையும் தாயுமானவரின் அன்பையும் வெளிப்படுத்துபவை. கடற்கரய்யின் கவிதைகள் வாசிக்க இதமானவை என்பதிலும் பார்க்க, அவை நமக்குள் நிகழ்த்துகின்ற மாயங்கள் கவனிக்கத் தக்கவை. மூவாயிரமாண்டுக் கால கவிதையின் தொடர்ச்சியை, ஒவ்வொரு சொல்லிலும் கொண்டுவந்துவிடுகிறார். வெறுமனே அனுபவங்களைப் பட்டியலிட்டு நவீனக் கவிதைகளின் சாயலை உண்டாக்க அவர் விரும்புவதில்லை. அதுமட்டுமல்ல, அவருக்கு யாருடைய பாராட்டுகளும் தேவைப்படுவதில்லை. தன்னை தனக்கே காட்டிக்கொள்ளும் தன்மையும் தரிசனமுமே அவருடைய கவிதைகள். சிக்கலான மொழியோ சிரமப்படுத்தும் படிமங்களோ அவரிடம் தென்படுவதில்லை. எளிய வாசகனையும் ஈர்த்து, அவனைத் தன் பக்கத்தில் இருத்திக்கொள்ளும் பாசமே அவருடையப் படைப்புகள். எனவேதான், கடற்கரய்யின் சொற்செட்டுகள், இரண்டாவது மூன்றாவது வாசிப்பிலும் தெவிட்டுவதில்லை.
Be the first to rate this book.