நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் சூழல் சிறுவர்கள் உள்பட அனைவரையும் நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், நாற்பது வயது தொடங்கியவுடன் உடல் ஆரோக்கிய அக்கறைதான் எல்லோருக்கும் முதலில் தோன்றுகிறது. முழு உடல் பரிசோதனை, அதுவும் மாதத்துக்கொரு பரிசோதனை என்று நம்மை மருத்துவமனைகளையும் மருந்துகளையும் நாடவைக்கிறது நாற்பது.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘இன்றைய மருத்துவ உலகம் வாழ்வியல் நோய்களுக்கான காரணிகளில், குறிப்பாய் நாற்பதுகளில் குடியேறும் ரத்த சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய், மாதவிடாய் முடிவில் ஏற்படும் நலமின்மை, மாரடைப்பு இவை அனைத்திற்கும் இந்தப் பரபரப்பான, சற்றுக் கோபம் தூக்கலான மனம் ஒரு மிக முக்கிய காரணம்’ எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் சித்த மருத்துவர் சிவராமன். எனவே, நமது சூழலை, சுற்றங்களை ரசனையோடும் அன்பாகவும் அணுகினால் வாழ்க்கையை இனிமையாக வாழலாம்!
Be the first to rate this book.