உத்தியோகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய அவசர யுகத்தில் உணவுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதே அரிதாக உள்ளது. காலநேரத்தை கணக்கில் கொள்ளாமல் வேலை ஓட்டத்தில் கிடைக்கும் உணவை உண்ணவேண்டிய அவசர நிலை இன்று. சத்து இழந்த வெறும் சக்கைகளே (பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட்) இன்றைய உணவுக் கலாசாரத்தில் முதன்மை வகிக்கின்றன. இதில் எங்கிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேடிச் செல்வது..? இயற்கையின் பின்னணியில் ஆரோக்கியமான உடல்நலத்தை வழங்கக்கூடியவை, காய்&கனிகளே! ‘நவநாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் செயற்கை உணவுப் பண்டங்களை உண்டு, நம் உடலுக்கு நாமே ஊறுவிளைவித்துக் கொள்கிறோம்.
எந்த அளவுக்கு உண்ணுகிறோம் என்பதைவிட, என்ன உண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம். புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின் போன்ற சரிவிகித ஊட்டச்சத்துமிக்க உணவுவகைகள் எவை, எந்த உணவில் என்ன வகை ஊட்டச்சத்து உள்ளது, எந்த அளவுக்கு உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து உண்ணும் பழக்கத்தை நம்மிடையே உருவாக்குவதற்கான தொடக்க நிலையே இந்த நூல். இதன் அடிப்படையில் உண்ணும் உணவு இயற்கை உணவா, செயற்கை உணவா?, இயற்கை உணவுகளான காய்கறிகளிலும் கனிகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, எந்தெந்த நோய்க்கு என்ன உணவு மருந்தாகும், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாமா, காய் மற்றும் கனி வகைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளின் கொள்ளளவு என்ன என்பதை அட்டவணையுடன் அழகுத் தமிழில் தெளிவாகத் தொகுத்துள்ளார் வெ.தமிழழகன்.
அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்நோக்கும் பற்பல உடல் உபாதைகளுக்கு இயற்கை உணவின் மூலம் தீர்வைத் தந்து, நம் வாழ்க்கையை இனிமைப்படுத்தும் மருத்துவ நூல்களில் இதுவும் ஒன்று.
Be the first to rate this book.