திருமணம்..!
நம் வாழ்வின் தித்திக்கும் தருணம். கனவுப்பொழுதுகளெல்லாம் கைகூடும் நாள். ஆடைகள் அலங்காரம் பெறும் வேளை. நாம் முழுமையடையும் அற்புத ஏற்பாடு. நம் குடும்பத்திற்கு புதிய வரவு, இனிய உறவு.
திருமண வாழ்வில் வளர்பிறை போல் பெருகும் அன்பும் காதலும் ஒரு கட்டத்தில் தேய்பிறையாய் மங்கத் தொடங்குகிறது. மனைவியின் சொல் மந்திரம் என்ற கணவனும், கணவனே கண்ணாளன் என்ற மனைவியும் நாளடைவில் எடுத்தெறிந்து பேசத் தொடங்குகிறார்கள். ‘என் மருமகளுக்கு வருமா? எங்க மாமியார் போல கிடைக்கக் கொடுத்துவைக்கணும்’ என்று பாசம் பரிமாறியவர்கள் சண்டைக் கோழியாய் மாறிப்போகிறார்கள். இனிக்கும் இல்லறம் கசக்கத் தொடங்கிவிடுகிறது. ஏன்?
இல்லற வாழ்வின் பிரச்னைகளை வெறும் ஆலோசனைகளாலும், அறிவுரைகளாலும் மட்டுமே தீர்த்துவிட முடியாது. ‘நோய் நாடி நோய்முதல் நாடி’ என்பது போல் பிரச்னைகளுக்கான காரணங்களை மிகத்துல்லியமாக அலசுகிறார் மெளலவி இஸ்மாயீல் இம்தாதி அவர்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மட்டும் சொல்லாமல் பிரச்னைகளுக்கான காரணிகளையும், பிரச்னைகள் வருமும் அதனை முறித்துப்போடும் வழிமுறைகளையும் இயல்பு வாழ்வின் எதார்த்ததில் நின்று பேசுகிறது இந்த நூல்.
ஏற்கனவே திருமணமானவர்களும், இனி திருமணம் புரிபவர்களும் கண்டிப்பாக இந்த நூலை வாசிக்க வேண்டும். இந்த நூலை நாம் திருமணம் செய்யும்போதே வாசித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் குடும்பஸ்தர்களுக்கும், ஆஹா... நல்ல வேளையாக இந்த நூல் நம் கைக்குக் கிடைத்தது என புதுமணத் தம்பதியருக்கு மகிழ்வும் இந்த நூல் வாயிலாக ஏற்படும்
திருமணம் குறித்து எத்தனை நூல்கள் வந்தாலும் இந்த நூலை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும். ஏனென்றால் ஓர் மார்க்க அறிஞரின் வழிகாட்டுதல்கள், ஓர் உளவியலாளரின் ஆலோசனைகள், ஒரு சமுதாயத் தலைவரின் கண்டிப்புகள், ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைகள், மணமக்களின் நண்பரின் அன்பு என்ற அத்தனை பரிமாணங்களிலும் மெளலவி இஸ்மாயீல் இம்தாதி இந்த நூல் வழியே உங்களோடு உரையாடுகிறார். உறவாடுகிறார்.
இல்லறம் இனிக்க இந்த நூல் மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடு. ஒவ்வொரு திருமண நிகழ்விலும் இந்த நூல் பரவலாக விநியோகிக்கப் பட வேண்டும்.
Be the first to rate this book.