ஒரு டம்ளர் அரிசிக்கு
மூன்று டம்ளர் நீர் ஊற்றி
தனியாய் உண்ண வாய்த்த
ஒருத்தியின் ஊரடங்குத் தனிமைக்கு
குக்கரின் மூன்று விசில் துணை இருக்கிறது.
நான்காம் ஊரடங்கின் முடிவில்
பேராளுமை பாரதி மணி பாட்டையா
தன் பேரன்களுக்கு அல்வா போலச் செய்த
தொக்கைத் தொட்டு
நாக்கில் இழுத்துக் கொள்ளலாம் போல்
அப்படி ஓர் அழகு
இளஞ்சோடிகளுக்காக
சின்ன லாசரா சமைத்த
பால்பாயசமும் அவியலும்
முகநூல் முழுக்க மணக்கிறது
புதிதாய்ப் பூத்திருக்கும்
பணிப்பெண்ணின் மகளுக்காக
எழுத்தாளுமை அகிலா புகழ் செய்த
பார்த்தால் நூவூறும் போண்டாக்கள்…
இவர்கள்
கடுமையை நோக்கிச்சரியும்
இந்த ஐந்தாம் கட்டக்
கொரானாக்காலத்தின் மீது...
ஒரு சிட்டிகை மகிழ்ச்சியைத் தூவுகிறார்கள்.
தனக்கெனச் சமைக்காத எதிலும்
தானாய்ச் சேர்ந்து விடுகிறது
ஒரு தேக்கரண்டி கூடுதல் சுவை.
Be the first to rate this book.