இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் - ஓர் அறிமுகம் பகுதியில் இருந்து...
இந்திய நிலப்பரப்பில் 1767-ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற்கு வருகை தந்த டென்மார்க் மருத்துவரான ஜோஹனன் ஜெராட் கோனிங் (Johann Gerhard Koening) அவர்களின் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆய்வே, இந்தியாவில் இத்துறைக்கான துவக்கப்புள்ளியாக கருதலாம். வகைப்பாட்டியலின் தந்தையாக கருதப்படும் காரல் லின்னெய்சிடம் (Carl Linnaeus), இவர் மாணவராகவும், இயற்கையியலாளராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பதினெட்டு ஆண்டுகளை இந்தியாவில் கழித்த இவர், பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், செடி கொடிகள், தாவரங்களைச் சேகரிப்பதில் பெரும் ஆர்வம் காட்டினார். சூழலில் ஆர்வம் கொண்ட ஆற்காடு நவாப், இவருக்கு ஆதரவு கொடுத்து தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தினார்.
வடசென்னை மற்றும் இலங்கையின் மரங்களடர்ந்த பகுதிகள், மலை முகடுகள், புதர்க் காடுகளில் கோனிங் பூச்சிகளைத் தேடியலைந்தார். தன்னுடைய ஆய்வுகளை டேனிஷ் அறிவியல் இதழில் (Danish Scientific Journal) அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஜெராட் கோனிங் திரட்டிய சுமார் 35-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகளின் மாதிரிகளைச் சேகரித்து ஜெ.சி.பேப்ரிசியஸ் (J.C.Fabricius) கோபன்ஹெகன்னுக்கு அனுப்பி வைத்தார். இதுவே இந்திய அளவில் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய அறிவியல்பூர்வமான முதல் ஆய்வு என்ற பெருமையை பெற்றது. இன்று வரை அவர் அனுப்பிய வண்ணத்துப்பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் கோபன்ஹெகன் உயிரின அருங்காட்சியகத்தில் (Zoological Museum of Copenhagen) பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியளவிலான வண்ணத்துப்பூச்சி ஆய்வுகளுக்கான தொடக்கப் புள்ளியாக வட சென்னை இருந்துள்ளதை அறியமுடிகிறது.
Be the first to rate this book.