வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இந்த நூலைத் தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உள்துறை, நிதித்துறை, ரயில்வே துறை, தொழில்துறை அளவுக்கு வெளியுறவுத் துறை குறித்து ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. அந்தத் துறைக்கென்று அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் பிரதமரே அதன் மூல விசையாகக் கருதப்படுவதால் அவருடைய ஆளுமையைப் பொறுத்து வெளியுறவு அமைகிறது என்றே பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. அப்படியல்ல, நம்முடைய வரலாறு, கலாச்சார, அடிப்படையிலும் பொருளாதாரத் தேவைகள் அடிப்படையிலும் ராணுவ நோக்கிலும் உறவுகள் எப்படி உருப்பெறுகின்றன என்று இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் எஸ்.ஜெய்சங்கர். வெளியுறவுத் துறை தொடர்பான மிக கனமான செய்திகளையும் எண்ணங்களையும் எடுத்துச் சொல்லும் இந்த நூல், ஒரு திருக்குறளைத் துவக்கமாகக் கொண்டு அமைந்திருப்பது தமிழர்களுக்குப் பெருமை தரக்கூடிய ஒன்று. அந்நிய நாடுகளுடனான ராஜதந்திரத்தோடு தொடர்புடைய ‘தூது’க்காக தனியே ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியிருப்பது வள்ளுவரின் மாண்புக்கு மற்றுமொரு சான்று. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த நூலின் வாயிலாகவும் அதைச் செவ்வனே செய்திருப்பதை வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.
Be the first to rate this book.