ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரசுவாமி விட்ட இடத்திலிருந்து தாகூர் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். எனினும் தாகூர் அவ்வளவாக முன்னால் செல்லவில்லை. தாகூர் எழுத்தின்வழி மட்டுமே செயல்பட்டார். ஆனால், குமாரசுவாமி ஒரு முழுமையான எழுத்தாளருக்கும் மேலானவராக, பண்பாட்டு வரலாற்றாய்வாளராகவும் இருந்தார். தொல்நூல்கள் மற்றும் அழகியல் சார்ந்து மட்டுமல்லாமல், வரலாற்றின் பிற அம்சங்கள், கலையின் தத்துவம், தர்மம், நடனம், இசை சார்ந்தும் முழுமையான பண்பாட்டு வரலாற்றாய்வாளராக செயல்பட்டார். மேலும் மனிதனின் வாழ்வில் தனித்தனியாகப் பிரிந்திருக்கும் பல்வேறு அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ஆய்வாளராக இருந்தார். குமாரசுவாமி ஓர் அறிஞர். ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாத அம்சங்களிலிருந்து ஒருங்கமைவு ஒன்றை உருவாக்க முயன்றார். அத்தகைய பிரம்மாண்ட ஒருங்கமைவுக்கான தேவை உள்ளது என முன்வைத்ததில் மிகச்சிறப்பான வெற்றியும் பெற்றார்.
- க. நா. சுப்ரமண்யம்
கீழைநாடுகளில் வளர்ந்திருக்கும் கலாசாரங்களுக்கும், சமயங்களுக்கும் காரணமான மூல தத்துவங்களை மேல்நாடுகளில் பரப்புவதற்காகச் சென்ற ஒரு கீழைநாட்டவர் என்று ஆனந்த குமாரசுவாமியைக் குறிப்பிடலாம். உலகத்தின் கலாசாரங்களும், சமயங்களும் ஒரே ஒரு மூலத்தினின்றும் உதித்துப் பிரிந்தவைதான் என்று தீவிரமாக நம்புகிறார் இவர்.
- ரசிகன்
ஆனந்த குமாரசுவாமியை, முதலில், ஒரு விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் கலைகளில் காலெடுத்து வைத்து, தன் வாழ்க்கை முழுதும் கலைகளைப் பற்றிய ஆராய்வுகளில் கழித்தவர் என்று சொல்வது தவறான அணுகல் முறையும் முடிவும் ஆகிவிடும். குமாரசுவாமியைப் பற்றிய சரியான அணுகல் அவரை ஒருமைப்பட்ட குணத்தின் (Integrated) சிறப்பான வெளியீடாகக் கொள்வதாகும்... விஞ்ஞானியின் புறவயமான, பகுத்தாராயும் சிந்தனையும், கலைஞனின் அகவயமான, உள்ளுணர்வுச் சிந்தனை வீச்சும் எங்கோ ஓர் ஆழத்தில் ஒன்றேயானவை. மேல்மட்டத்தில்தான் அவை இருவேறு குணங்களாகத் தெரிகின்றன. ஆனந்த குமாரசுவாமியின் சிந்தனை இத்தகைய ஒன்றுபட்ட குணம் வாய்ந்தது.
- வெங்கட் சாமிநாதன்
இந்திய மரபுக் கலைகளிலிருந்து இன்றைய நவீனக் கலைஞன் இரு வழிகளில் தனக்கான கலையைக் கண்டடைய இடமுள்ளது. ஒன்று, மரபு ஓவிய சிற்பங்களில் உள்ள அழகியல் கூறுகளை மட்டும் எடுத்து காலத்திற்கேற்ப, தன் ரசனைக்கேற்ப மறு ஆக்கம் செய்வது. இரண்டு, மரபில் உள்ள தத்துவங்களை எடுத்து அதை நவீன சமகாலக் கலைப் பண்புடன் வெளிப்படுத்துவது. இந்த இரண்டையும் சரியாகச் செய்ய மரபுக் கலை எப்படி இயங்கிவந்தது என்று தெரிந்திருப்பது மிக அவசியம். மரபுக் கலை இயங்கிய விதத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ள அனைவருக்கும் ஆனந்த குமாரசுவாமியின் இக்கட்டுரைகள் உதவும்.
- ஜெயராம், ஓவியர்
Be the first to rate this book.