இன்றைய இன்ஸ்டண்ட் கிரிக்கெட் ரசிகர்ளிடம், இந்தியா கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் கோளோச்சுவதின் அடித்தளமாக இருப்பது ஐபிஎல்தான் என்ற ஒரு மாயை மேலோங்கியுள்ளது. ஆனால் புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனித்தோமேயானால், சர்வதேச அளவில் நிலைத்து நிற்கும் இந்திய ஆட்டக்காரர்களெல்லாம் ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை அல்லது தியோதர் கோப்பை போன்ற தேசிய அளவு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து பரிமளித்தவர்களாக இருப்பார்கள். உறைந்துபோன புள்ளி விவரங்களுக்குப் புத்துயிர் பாய்ச்சும் வகையில் ரஞ்சித் சிங்ஜியும், விஜய் ஹசாரேவும், பேராசிரியர் தியோதாரும், துலீப் சிங்ஜியும் ஆடிய காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
பம்பாயின் பெருவணிக பாரம்பரியத்திலிருந்து வந்த பார்சிகள் மட்டுமே விளையாடிய ’ஓரியண்டல் கிரிக்கெட் கிளப்’ இந்தியாவில் 1848லேயே தொடங்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேய பிரபுக்களுடன் நல்ல வணிக உறவிலிருந்த டாடாவும்,வாடியாவும் அதற்குப் புரவலர்களாக இருந்தனர். அதுதான் இன்றைய மும்பை இந்தியன்ஸுக்கெல்லாம் முன்னோடி.. 1877இல் உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் கிரிகெட் போட்டி இங்கிலாந்திற்கும் , ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடந்தது. ஆனால் அவர்களுக்கு இணையான நீண்ட நெடிய கிரிக்கெட் பாரம்பரியம் உள்ள ஒரு பிரதேசத்திலிருந்து ஒன்றுபட்ட ‘இந்திய கிரிக்கெட் அணி’ என்ற ஒன்று உறுவாகி, அது இங்கிலாந்தை எதிர்த்து ஆடிய முதல் அதிகாரப்பூர்வமான டெஸ்ட் போட்டி 1932இல்தான் நடந்தது.
இந்த இடைப்பட்ட 55 ஆண்டு காலத்தில் நடைபெற்ற 218 டெஸ்ட் போட்டிகளின் கதையை சுதந்திரப் போராட்டங்கள் மற்றும் உலகம் யுத்தங்களின் பின்னணியில், திரு.ஜெயராமன் இலக்கிய நயத்தோடு ஒரு நேர்முக வர்னணைபோலவே புத்தகமாக வடித்திருக்கிறார். 4 பால்களிலிருந்து 6 பால் ஓவர் உருவான கதை,கோட்டைத் தாண்டினால் 6 ஓட்டங்கள் என்று சிக்ஸர் எப்படி வந்தது, ஆஷஸ் கோப்பை பெயர்க் காரணம், பாடி லைன் தொடர், ஸ்டிக்கி விக்கெட், ஃப்ளிப்பர், கூக்லி, சைனாமேன் போன்ற பந்துவீச்சு உத்திகள் உருவான விதம், டான் பிராட்மேனே வியந்து பாராட்டிய இந்திய ஆட்டக்காரர் போன்ற சுவாரஸ்யமான பல சம்பவங்களைப் பற்றிப் படிக்கையில் நிர்ணய ஓவர் கிரிக்கெட் போட்டிகளைவிடப் பரபரப்பாக பல டெஸ்ட் போட்டிகள் நடந்திருப்பது புரியும்.
திரு. ஜயராமன் சிறந்த ரசிகர். கிரிக்கெட் ஆட்டக்காரரும் கூட… ஒலிபரப்புத் துறையில் பல்வேறு அம்சங்களில் மிளிர்ந்தாலும், ‘தமிழ் நேர்முக வர்ணனையாளர்’ என்ற முறையில்தான் பலர் அவரை அறிவார்கள். இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்பொழுது, அன்றைய ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல, வர்ணனையாளர்களும் எப்பேர்ப்பட்ட ’ஜெண்டில்மென்’களாக இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.
Be the first to rate this book.