இன்றைய இளைய தலைமுறைக்கு இன்றியமையாத செய்தியை எடுத்துரைக்கும் நூல்.
கற்ற கல்வியால் சொந்த நாட்டில் பணியாற்ற விருப்பமில்லாமல் அயல் நாடுகளில் – குறிப்பாக அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வேலை பார்க்கப் பேராசைப்படுகிறது இன்றைய புதிய தலைமுறை. சொந்த நாட்டில் சம்பளம் குறைவு – என்ற ஒரே காணத்துக்காகப் பிற நாட்டு வாழ்வில் மோகம் கொண்டவர்கள் நம் காலத்தில் பெருகி வருகின்றனர். அதற்கேற்ப Placement என்ற அன்னிய நாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றோரும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தர ஆவல் பூண்டுள்ளனர்.
முடிவு யாதெனில் பெற்றோர் நிரந்தரமாய் பிள்ளைகளை இழக்கின்றனர். பிள்ளைகள் தாய் நாட்டுக்கு ஒருக்காலும் திரும்பி வராத அவலம் தொடர் கதையாகிறது. நாடு தன் அறிவுத் தலைமுறையின் உன்னத சாரத்தை முற்றிலுமாகப் பறி கொடுத்து விடுகிறது. ஒரு வகையில் அயலக வாழ்வு என்பது மாரீச மான் வேட்டையாக மாறி விடுகிறது. எந்த நாட்டுக்கும் உரிமை இல்லாததாக அல்லது பற்றும் பாசமுமில்லாததாகப் பல்லாயிரம் பேரின் வாழ்வு பரிணாமம் பெறுகிறது.
புலம் பெயர்ந்த இளையவர்களோ தாய் நாட்டைக் குறித்துப் பெருமையும் பெருமிதமும் அற்றவர்களாய் – இந்த நாடு குப்பை மேடு என்று கருதுகிற கொடுமையும் அரங்கேறி வருகிறது.
இச் சூழலில் அமெரிக்காவில் குடியேறிய பெற்றோரின் (தாய் பஞ்சாபி – தந்தை தமிழர்) மூத்த பிள்ளையான ஆனந்த் கிரிதரதாஸ் கூட இந்தியாவை வறுமையின் பூமியாகவே இளமையில் கருதுகிறார். பின்னர் ஏற்பட்ட ஒரு மன எழுச்சியால் பெற்றோரின் தாய் நாட்டில் – இந்தியாவில் வாழ்ந்துதான் பார்ப்போமே என்று இங்கு வேலை பார்க்க வருகிறார்.
அவருடைய அனுபவங்கள் மாறி வரும் புதிய இந்தியா பழமையின் சிறப்புடையதாயினும் புது வாழ்வை நோக்கி வேகமாக முன்னேறுவதை உணர்த்துகின்றன. குறைகளும் குற்றங்களும் கொண்ட இந்தியச் சமுதாயம் எதிர்கால ஒளியை நோக்கிச் சிறகு விரிப்பதைக் காண்கிறார். தானும் அதன் அங்கமாக மாறுகிறார்.
இந்தியச் சமுதாயத்தின் புதிய விழிப்பில் கிராமத்து மனிதனும் பங்கு கொள்கிறான். கற்ற வர்க்கமும் கை கோக்கிறது. பழைய துருப்பிடித்த சம்பிரதாயங்களைத் தகர்த்து முன்னேறும் இந்தியா – குடும்பம், காதல், நம்பிக்கைகள், உணவு, உடை, அனைத்திலும் புது நெறிகளை மேற்கொள்கிறது.
இந்த நிதர்சனங்களை ஒரு அனுபவ வெளியீடாகவும், சமுதாய ஆய்வாகவும் ஆனந்த் கிரிதரதாஸ் நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த வகையில் நம் இளையோருக்கு ஒரு புதுவிழிப்பை இந்நூல் நல்கும் என்று நம்புகின்றோம்.
புதிய தொழில் வளர்ச்சிக்கு அம்பானி என்ன வகையில் பங்களிப்புச் செய்தார் என்ற கதையும் இந்த நூலில் பேசப்படுகிறது.
எல்லாக் குறைகளுக்கும் அப்பால் நேசிக்கத் தக்க தாயகம் நம்முடையது என்ற பெருமிதத்தை இந்தியா அழைக்கிறது முன் வைக்கிறது.
Be the first to rate this book.