இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னையையும் அதன் அரசியல் பின்புலத்தோடு பொருத்தாமல் புரிந்துகொள்ளமுடியாது. 1947க்குப் பிறகான சூழலில் இருந்து தொடங்கி படிப்படியாக இந்திய அரசியல் உருபெற்ற கதையை விவரிக்கும் இந்தப் புத்தகம் நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. நேரு காலம், இந்திரா காலம், ராஜிவ் காலம், வி.பி. சிங் காலம், நரசிம்மராவ் காலம், வாஜ்பாய் காலம் என்று தனித்தனியே பாகம் பிரித்து, தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் கச்சிதமாகப் படம்பிடிக்கிறது. இதில் அரசியல் கட்சிகள் உருவான கதை இருக்கிறது. கூட்டணி அரசியல் தோன்றி, வளர்ந்த கதை இருக்கிறது. இந்தியாவைப் பாதித்த முக்கியச் சம்பவங்களும் அவற்றை அரசியல் ஆளுமைகள் எதிர்கொண்ட கதைகளும் இருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புகள், அதிரடித் திருப்பங்கள், கொள்கை மாற்றங்கள் என்று இன்றைய அரசியல் களத்தில் இயல்பாகிவிட்ட விஷயங்களின் தோற்றுவாய் இதில் இருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால இந்தியாவின் அரசியல் வரலாற்றை ஆழமான அதே சமயம் எளிமையான முறையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம். ராமச்சந்திர குஹாவின்?‘இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ நூலோடு?இணைத்து வாசிக்கவேண்டிய முக்கியமான நூல் இது.
Be the first to rate this book.