போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.
Be the first to rate this book.