உலகின் மிக பழமையான நாடுகளில், நமது பாரத பூமியும் ஒன்று. அதனால், பாரத நாட்டின் சரித்திரம், எப்போது துவங்கியது என, யாராலும் கூற முடியாது. ஆனாலும், பாரத நாட்டின் வரலாறு, மிகவும் சுவாரஸ்யங்கள் கொண்டது. அந்த வகையில், பாரத நாட்டின் வரலாற்றை, மிகவும் ஆழ்ந்து ஆய்வு செய்து இரு ஆசிரியர்கள் எழுதிஉள்ளனர்.
புராண காலத்திலிருந்து சமீபகாலம் வரை, இந்தியாவின் வரலாற்றை, அழகாக தொகுத்து வழங்கியுள்ளனர். இந்தியாவில் அன்னியர்கள் ஆட்சி அமைந்ததற்கு, நம் மன்னர்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்ததே காரணம் என்பதை, ஆதாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமின் தோற்றம், இந்தியாவில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி, அதன்பின் ஆங்கிலேயர்கள் ஆட்சி, காந்தி, நேதாஜி, நேரு, படேல், ராஜாஜி கால அரசியல் சூழல் போன்றவற்றை சிறப்பாக விளக்கியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த நிலைமை, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட ரத்தகளரி, காந்தியடிகள் கொலை ஆகியவற்றை படிக்கிற போது நேரில் பார்ப்பது போன்ற மனநிலை தோன்றும். சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தின் பங்கு சரியாக சொல்லப்படவில்லை என்ற குறை இருந்தது. ஆனால், இந்த புத்தகத்தில், சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, நேதாஜி, 1939 செப்., 3ம் தேதி மதுரை திலகர் திடலில் தனது பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பேசிய பிரமாண்டக் கூட்டமும் அதில் உள்ள தகவல்களும் சிறப்பானவை. அவருடன் மேடையில் தியாகி எஸ்.சீனிவாச அய்யங்கார், பசும்பொன் தேவர் இருந்ததை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 583). தமிழக வரலாற்றுச் சிறப்பையும் ஆசிரியர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
Be the first to rate this book.