ஃபத்வாக்கள் தடம்புரளுவதற்கான மற்றுமொரு காரணி மேற்கின் சிந்தனைக்கும் அதன் நாகரிகத்திற்கும் அடிபணிவதாகும். நமது சமூகத்தில் சிலர் மேற்கின் அபார வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களுக்கு முன்னால் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். மேற்கின் வாழ்க்கை முறைகளை நாகரிகத்தின் அடையாளங்களாக அவர்கள் பார்க்கிறார்கள். எனவே, மேற்கின் போக்கோடு இணைந்து செல்வதையே அவர்கள் சரி என கருதுகிறார்கள்.
மேற்கின் அறிவியல், ஆராய்ச்சிகள் மற்றும் பல துறைகளிலும் அவர்கள் கண்டிருக்கும் அபாரமான வளர்ச்சி போன்றவையே நம்மில் சிலரிடம் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நமது மக்களை மூளைச் சலவை செய்து மேற்கைப் பூஜிக்க வைத்ததில் அவர்களும் உண்மையில் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
நமது மண்ணை ஆக்கிரமிக்க இடம் கொடுத்ததுபோல, நமது மக்கள் தங்களது மூளைகளை (சிந்தனைகளை) ஆக்கிரமிக்கவும் அவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டார்கள். இதனைவிடக் கொடிய அடிமைத்தனம் வேறெதுவும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது படைகளும் நாட்டைவிட்டு வெளியேறினாலும் அவர்களது சிந்தனைகளும் வாழ்க்கை முறையும் சட்டமும் ஒழுங்கும் கலாசாரமும் இங்கே நங்கூரமிட்டு தங்கியிருப்பதே உண்மை.
இவையனைத்தையும்விட ஆபத்தானது, இந்த அச்சுறுத்தலை விளங்காதிருப்பதும் அதனை அச்சுறுத்தலாகவே கருதாமலிருப்பதுமாகும். இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்த அச்சுறுத்தல்களுக்கு சார்பாக இயங்கும் போக்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றது. அதுதான் மேற்கின் நடைமுறைகளை ஷரீஆ சாயம் பூசி சரிகாண வைப்பதாகும். அதற்கேற்ப குர்ஆனையும் சுன்னாவையும் வளைத்து விளக்கம் கொடுப்பதாகும்.
Be the first to rate this book.