எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, "பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்கு அரிசி கடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா? உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா? அல்லது "அழுகிய வாழைப் பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால் புரோகிதருக்குத் தானம் கொடுத்துவிடு!" என்று கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னாரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்கிறார்களா? இதை நேரில் தெரிந்துகொண்டு வருவதற்காக இலங்கைக்குச் சமுகம் கொடுப்பது என்று தீர்மானித்தேன்.
Be the first to rate this book.