இந்தியாவின் விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட தேசபக்தர்களும் தியாகிகளும் எண்ணற்றவர்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக எண்ணிலடங்காத் தொண்டர்கள், தலைவர்களின் பின் நாடு முழுவதும் அணிதிரண்டனர். ஆங்கிலேய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டித்து பலவித போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். பல்வேறு அமைப்புகளாகவும் இயக்கங்களாகவும் செயல்பட்டனர். அந்தச் சூழலில் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டக் களத்தில் பங்கு வகித்தவன் பஞ்சாப் தந்த புரட்சியாளன் பகத்சிங். பகத் சிங்கின் தாத்தா அர்ஜுன்சிங் விடுதலைப் போராட்ட வீரர்; தந்தை கிஷன்சிங்கும் ஒரு விடுதலை வீரர். தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உதித்த புரட்சிவீரன் பகத்சிங். தேசமே உயிர்மூச்சு அதன் விடுதலைக்காக இளைஞர்கள் எந்த தியாகமும் செய்யத் தயாராகவேண்டும் என்று அறைகூவல் விடுத்து இளைஞர்களின் உள்ளத்தில் சுதந்திர வேட்கையை விதையூன்றச் செய்தார்.
Be the first to rate this book.