கலைக்களஞ்சியம் என்பது எழுத்து வடிவிலான அறிவுத் தொகுப்பு. அது பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கானதாகவோ, நிலம், இனம் குறித்தோ அமையலாம்.
தமிழுக்குப் புதிய முயற்சியாக அமையும் இந்தக் களஞ்சியத்தில் வேதசகாயகுமார், இலக்கியத் திறனாய்வை முன்வைத்துத் தொகுத்திருக்கிறார். இதில் தமிழ் இலக்கிய விமர்சனத்தில் தடம் பதித்த ஆளுமைகள், விமர்சனக் கொள்கைகள், விமர்சன இயக்கங்கள், இலக்கிய வடிவங்கள், விமர்சன வளர்ச்சிக்குக் களம் அமைத்த இதழ்கள், விமர்சனக் கலைச்சொற்கள் என அனைத்து செய்திகளும் அகரவரிசையில் இடம்பெறுகின்றன.
சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான இலக்கியத் திறனாய்வு தொடர்பான அனைத்து செய்திகளையும் தெளிவான நடையில், ஓரிடத்தில் தொகுத்துத் தருவது மூலம் இந்தப் புத்தகம், இலக்கிய மாணவருக்கும் பொதுவான வாசகருக்கும் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் பல்வேறு போக்குகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
இதுவே இலக்கிய விமர்சனம் என்னும் இலக்கியத்தின் மீதான ஆய்வு, மதிப்பீடு, விளக்கம் ஆகியவற்றுக்கான விமர்சனக் கருவிகளை நம்மிடம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது; சமகால இலக்கிய வாசிப்புக்கு நல்லதொரு திறவுகோல்..
*
வேதசகாயகுமார் கறாரான அழகியல் விமர்சகர் . மூலநூலை விரிவாக, ஐயமறக் கற்பது அவர் வழி. அது நவீனத் தமிழிலக்கியமானாலும் சரி, மரபிலக்கியமானாலும் சரி, பிரதி சார் விமர்சனம் அவருடைய மரபு. சி.சு. செல்லப்பாவுக்குப் பின் வேதசகாயகுமார்தான் தமிழின் முக்கியமான, அசல் விமர்சகர்.
இந்தக் குறுங்கலைக்களஞ்சியம் தமிழ் நவீன இலக்கிய விமர்சன மரபைப் பற்றியது. அதிலுள்ள மைய ஆளுமைகளைத் தொகுத்துப்பார்ப்பது. தமிழில் இவ்வகையில் இதுவே முதல் முயற்சி. தமிழ் இலக்கிய விமர்சனத் தளத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு.
-ஜெயமோகன்
Be the first to rate this book.