நான்கு தொகுதிகளைக் கொண்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம், இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குறித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னைப் பீடித்திருக்கிறது!
கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டிகாண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையில்லிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!
ஒரு மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (Spade Work); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (Field Work); சென்னைக்கு வந்த பிறகு 15 - 20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and Writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (Transcribing) எடுப்பதற்கு மட்டும் நான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால், கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலி நாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் முழுசாய் ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது.
சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல்போனதில், முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞானபீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும், ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருடங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! கெளஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர், இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாயவினால், தற்சமயம் பலகையில் எழுதிக் காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனதைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.
மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது. .
ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை, இத்தொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும், இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன்.
'அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புகளையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல் கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புகளின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபடவைக்கும்... உறுதியாய்!
- சிவசங்கரி
Be the first to rate this book.