பாரதத்தை வாழ்த்தி பாரதியார் பாடிய வைர வரிகளை யாரும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா!’ என்ற பாடல் வரிகள் உத்வேகத்தை ஊட்டுபவை. அந்தப் பாடல் வரிகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு, ‘சக்தி விகடன்’ இதழ்களில் இளைய தலைமுறைக்கு அறநெறிகளை வழங்கி வருகிறார் சுவாமி ஓங்காராநந்தர். அவரது முதல் முப்பது கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. இளைஞர்கள்தான் தேசத்தின் நலம் காக்கும் வருங்காலத் தூண்கள் என்பதை மனதில்வைத்து, நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்களான இளைஞர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கவேண்டும், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பவற்றை விளக்கமாகக் கூறியுள்ளார் சுவாமி ஓங்காராநந்தர். திருக்குறள் காட்டும் வாழ்க்கைமுறை, தேவாரப் பாடல்கள், பாரதியாரின் பாடல்கள், பெர்னாட்ஷா போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் கூறிய தத்துவங்கள் என பல விஷயங்களை இந்த நூலில் மேற்கோள் காட்டியுள்ளார். ஆன்மிகம் எது? பகுத்தறிவு எது? என பல விஷயங்களையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் சுவாமிகள். இளைய தலைமுறையின் வாழ்க்கையை வளப்படுத்த புராணக் கதைகளோடும் உண்மைச் சம்பவங்களோடும் எடுத்துரைத்துள்ளார். திருக்குறள் கூறும் வாழ்க்கைமுறையை பின்பற்றி உன்னத நிலையை அடையலாம் என்பதை ஆணித்தரமாக கூறுகின்றார். இந்த நூல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை வழிநடத்தும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்கூட படித்து பயன்பெற உதவும் அறநெறி கூறும் அறிவுநூல்.
Be the first to rate this book.