இந்த நூல் ஒரு முக்கியமான நூல்.கடந்த 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்ந்து வரும் வித்தியாசமான அரசியல் வளர்ச்சிகளைக் குறித்த நூல் இது.தினசரி நடைமுறை அரசியல் செயல்பாடுகளை இந்நூல் கோட்பாட்டு நோக்கில் ஆய்வு செய்கிறது என்பது இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.புதிதான அந்நிகழ்வுகளை "வெகுமக்களியம்"(Populism) என்ற சொல்லின் கீழ் இந்நூல் பொதுமைப்படுத்திக் காட்டுகிறது.
வெகுமக்களியம் என்பது மேட்டுக்குடி எதிர்ப்பு,உலகமயமாக்க எதிர்ப்பு,முதலாளிய எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட மக்கள் அரசியலைக் குறிக்கும் சொல்லாகும்.அதிகம் அறியப்பட்ட இடதுசாரி அரசியலிலிருந்து இவ்வகை அரசியல் சிறிது விலகிச் செல்கிறது.ஆயின் வெகுமக்களியத்தால் விமர்சிக்கப்படும் நிலைப்பாடுகள் இடதுசாரிகளாலும் விமர்சிக்கப்படுபவைதான்.
இடதுசாரிகளை விட பரந்த மக்கட் பரப்பைத் தங்கள் இயக்கம் தழுவி நிற்பதாக இவ்வியக்கத்தார் கூறுகிறார்கள்.பெண்ணியம்,மனித உரிமைகள்,பசுமை இயக்கம்,ஊழல் ஒழிப்பு போன்ற பல புதிய இயக்கங்களை வெகுமக்களியம் உள்வாங்கித் தொழில்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
வெகுமக்களியம் சமீப காலங்களில் வேகம் கொண்டாலும் அதற்கு ஒரு வரலாறு உண்டு.1891 ல் அமெரிக்காவில் தோற்றம் பெற்ற 'மக்கள் கட்சியின்'(People's Party) வரலாற்றிலிருந்து வெகுமக்களியம் தோன்றி வளர்ந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ரஷ்யாவில் தோன்றிய நரோத்னிக்குகளின் (ரஷ்ய மொழியில் நரோத் எனில் மக்கள் என்று பொருள்) இயக்கமும் வெகுமக்களியப் பண்பு கொண்டது என்று கூறுவார்கள்.
விவாசாயிகள்,சிறு வணிகர்கள் ஆகியோரை முன்னிலைப்படுத்தி அதிகார மையங்களை எதிர்க்கும் இயக்கம் என அது அப்போது வழங்கப்பட்டது
எளிய மக்களின் முதலாளிய எதிர்ப்பு மனோபாவம் வெகுமக்களியத்தின் முனைப்பான நிலைப்பாடாக உருவாகியது.
ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியை ஒரு கற்பனாரீதியான(Romantic) முதலாளிய எதிர்ப்பாளர் என்று ஜியார்ஜ் லுக்காச் என்ற மார்க்சிய அறிஞர் மதிப்பிடுவார்.
வெகுமக்களிய அரசியல் ஒரு வகையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு நெருக்கமானது.விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாடுகளில் முதலாளிய எதிர்ப்புக்கான வேர்கள் வலுவாக உள்ளன என்ற ஒரு கணிப்பு உண்டு. மட்டுமின்றி அந்நாடுகளின் அரசியலுக்கு ஜனரஞ்சகத்தன்மை, உணர்ச்சிவசப்பட்ட பிரச்சினைகள், கவர்ச்சிகரமான தலைமை, வெகுமக்கள் திரட்சி ஆகியவை முக்கியப்படுகின்றன.
இவையெல்லாம் வெகுமக்களியத்தின் பண்புகள் என்று கருதப்படுகின்றன.
இந்நூல் வெகுமக்களியத்தின் அடிப்படையான முதல் நூலாகக் கருதப்படுகிறது.சோசலிசத்திற்கான நகர்வுகளில் வெகுமக்களின் பாத்திரத்திற்கு முன்னுரிமை வழங்கும் முனைப்பு இவர்களின் நூல்களில் உள்ளது..மக்கள் என்ற சொல் பன்மீயப் பொருண்மை கொண்டது என்பதை இந்நூலின் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
பலவகை உழைப்பாளிகள்,பெண்கள்,சுற்றுச்சூழலியர், மனித உரிமையாளர்கள் ஆகிய பல பகுதியினரின் பிரச்சினைகளுக்கிடையில் நிலவும் "சமனிகளைக்"(Equivalents) கண்டறிந்து அவர்களை ஒன்றுபடுத்தும்போதுதான் வெகுமக்களியம் உருவாகிறது என்ற லக்லெளவும் மோஃபேயும் அந்நூலில் எழுதினர் .அத்தகைய அரசியல் ஒன்றுபடுத்தலின் போதுதான் "மக்கள்" என்ற கருத்தாக்கமே கூட கட்டமைக்கப்படுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
Be the first to rate this book.