தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத் 2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல். “ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை, ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம்” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய் பிரசாத், அதற்கொப்ப இடதுசாரிகளின் இன்றைய நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகின்றார்.
கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப்படலாம். பலமுறை தவறான வழியில் சென்றுவிடலாம். ஆனால் போராட்டத்தின் மூலமாக, சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று, விஸ்வரூபமாக மீண்டும் எழும் என்பார் கார்ல் மார்க்ஸ். “இப்படி நடந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் எனது சார்பு இருக்கிறது. இதில் பாரபட்சமற்ற தன்மை என்ற பாசாங்கு கிடையாது. ஆனால் இது எதார்த்தத்தை ஒட்டியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன்” எனக் கூறும் விஜய் பிரசாத் என்மீதும் பிறர் மீதும் எனக்கு ஒரேவிதமாக இரக்கம்தான் என்று கூறி, இரக்கமற்ற துல்லியத்துடன் இடதுசாரிகளின் நிலையை, அவர்கள் வந்த பாதையை, சந்தித்த சவால்களை, அவற்றை எதிர்கொண்ட விதத்தை எல்லாம் வரலாற்றுப் பின்புலத்துடன் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார்.
Be the first to rate this book.