உலக மக்களின் அத்தியாவசியமான இரண்டு தேவைகள் உணவு மற்றும் எரிபொருள். பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோகார்பன் வளம் எரிபொருள் தேவையைப் பெருமளவில் நிவர்த்தி செய்கிறது. இதிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை இன்றி அடுப்பங்கரையில் இருந்து விமானம் வரை ஒன்றும் இயங்காது. அதுபோல விவசாயம் இன்றேல் உணவும் இல்லை வாழ்வும் இல்லை.
இந்நிலையில், தொன்றுதொட்டு வேளாண் பூமியாக திகழ்ந்துவரும் காவிரிப்படுகை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரம் போற்றும் மக்களுக்கும் இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. இதுதான் இன்று தமிழ்நாட்டில் தோன்றியுள்ள சமூக-அரசியல் சிக்கலின் மூலமாகும்.
இதில் யார் சரி? யார் தவறு? ஹைட்ரோகார்பன் தேவைதான், ஆனால் அதற்காக காவிரிப் படுகை பலியிடப்படவேண்டுமா? இது மக்களின் கேள்வி. எண்ணெய் துரப்பணத்தால் பாதிப்பு ஏதுமில்லை, நாட்டின் வளர்ச்சிக்கு அது அவசியமென்கிறது ஓ.என்.ஜி.சி. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல்பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார் கா. அய்யநாதன்.
ஹைட்ரோகார்பன் துரப்பணத்தால் இயற்கைச் சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கம், அதன் விளைவாக மானுட வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியனவற்றைப் பல்வேறு அறிவியல் ஆய்வறிக்கைகளைக் கொண்டு நிரூபணம் செய்வதோடு, ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் காவிரிப் படுகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெடுவாசல், மாதிரிமங்கலம், கதிராமங்கலம் என்று விரிவாகப் பயணம் மேற்கொண்டு நேரடிக் கள ஆய்வின் மூலம் பகிர்ந்துள்ளார் நூலாசிரியர்.
ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இயற்கைச் சூழலுக்கும் மானுட வாழ்வுக்கும் விவசாயத்துக்கும் அழிவையே ஏற்படுத்தும் என்று அழுத்தமாக நிரூபணம் செய்துள்ளார்.
Be the first to rate this book.