பொங்கல் மலர் 2022 தமிழ்நாட்டின் 10 கால்நடைச் சந்தைகள், பிரபல எழுத்தாளர் சுப்பாராவின் இளவயது மாட்டுப் பொங்கல் அனுபவங்கள், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உள்ள தேசிய உணவு அருங்காட்சியகத்தின் சிறப்புகள் ஆகியவை பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கக்கூடியவை.
ஆன்மிகம் பகுதியில் தமிழக ராமர் கோயில்கள், நிதிவன் கிருஷ்ணர் கோயில், பக்த மீரா பாயின் கதை, வைணவத்தின் அர்த்த பஞ்சகம் எனப் பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
திருநெல்வேலியைச் சேர்ந்த மூத்த ஓவியர் மாலையப்பனின் நாயன்மார் ஓவியங்களின் சிறப்புத் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமா இசையில் சாதித்துவரும் யுவன், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரன், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட இளமைத் துடிப்புமிக்க இசையமைப்பாளர்களின் வளர்ச்சி குறித்து சுவாரசியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கோவில்பட்டியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், உதயசங்கர், சாரதி, ஓவியர் மாரீஸ் ஆகியோரின் நட்பு, இலக்கிய ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது ஒரு கட்டுரை. எஸ். ராஜகுமாரன், சாளை பஷீர், இ. ஹேமபிரபா ஆகியோரின் மாறுபட்ட சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
பெண் கல்விக்காகப் பாடுபடும் நோபல் அமைதிப் பரிசு பெற்ற பாகிஸ்தான் இளம்பெண் மலாலா தொடங்கி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அகதி அணியின் கொடியை கம்பீரமாக ஏந்திச் சென்ற சிரியாவைச் சேர்ந்த யுஸ்ரா மார்தினிவரை உலகின் போக்கை மாற்றிக்கொண்டிருக்கும் 10 இளம்பெண்கள் குறித்து பெருமைமிகு பெண்கள் பகுதியில் தனித்தனி கட்டுரைகள் அலசுகின்றன.
ஆந்திரப்பிரதேச அரக்குப் பள்ளத்தாக்குப் பழங்குடிகள், அடையாறு தியசாபிகல் சொசைட்டியின் இயற்கை அம்சங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்புகளும், கர்நாடகத்தின் ஆகும்பே மழைக்காட்டுப் பயணம், தூக்கணாங்குருவிகளின் கூடு கட்டும் நுட்பம் குறித்த கட்டுரைகள் பயண ஆர்வத்துக்குத் தீனி போடக்கூடியவை.
நூற்றாண்டு காணும் வங்கத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் குறித்த கட்டுரை, எழுத்தாளர் யூமா வாசுகியின் அன்பளிப்பு சிறார் கதை ஆகியவையும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.