1992இல் இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றை மாற்றியமைத்தவர். இன்றைக்கும் SEBI பல சட்டதிட்டங்களைக் கடுமையாகச் செயல்படுத்துகிறது என்றால் முப்பது வருடத்திற்கு முன்பு இவர் செய்து வைத்த சம்பவம் அப்படி. இன்னும் சொல்லப் போனால், SEBI என்ற அமைப்பு மக்களுக்குத் தெரியத் தொடங்கியதே இவர் செய்த குற்றத்தால்தான். இவரைக் கைது செய்த சமயத்தில் பல தரகர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சி.பி.ஐயும் பலர்மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், ஹர்ஷத் மேத்தா அளவுக்கு யாரும் நினைவில் கொள்ளப்படுவதில்லை.
முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட ஒரு குற்றத்தையும், அந்தக் குற்றத்தைப் புரிந்த மனிதரைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? என்று உங்களுக்குத் தோன்றலாம். உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்தக் குற்றம் நம் நினைவில் இருக்கிறது. அந்தக் குற்றத்தால் அது ஏற்படுத்திய விளைவுகளால் எழுதப்பட்ட சட்டங்களும் இருக்கிறது. அதனால், அதன் உண்மைச் சம்பவத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளுவது நல்லது.
உங்களுக்குப் பங்குச் சந்தை குறித்த ஆர்வம் இருந்தால் ஹர்ஷத் மேத்தா பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம். இது போன்ற மேத்தாக்கள் இன்னும் பங்குச் சந்தையில் இருக்கிறார்கள். நமது பணத்தை முழுமையாக விழுங்கக் கூடிய சம்பவத்தைச் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நாம் அபாய மணியோடுதான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.
பல நடுத்தரக் குடும்பத்தின் மக்களுக்குக் கனவுகள் கொடுத்து, பின்னர் அவர்களை வீதியில் விட்ட ஹர்ஷத் மேத்தா பற்றி நாம் தெரிந்துகொள்வது கட்டாயம் அவசியம்.
Be the first to rate this book.