சில புத்தகங்களை வாசித்து முடித்தப் பிறகு வேறு எதையும் சில நாட்களுக்குப் படிக்க விருப்பமே இருக்காது. அத்தனை ஆழமான பாதிப்பை நமக்குள் ஏற்படுத்திவிடும். அது போன்ற ஒன்றுதான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ’ஹாஜி முராத்’. இந்த நாவலே அவரது மிகச் சிறந்த படைப்பு என ஹெரால்டு ப்ளும் போன்ற இலக்கிய விமர்சகர்கள் கூறுகிறார்கள். தமிழில் இந்த நாவலை மெஹர் ப.யூ.அய்யூப் மொழியாக்கம் செய்திருக்கிறார். என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நாவலை எழுத டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட வருஷங்கள் எவ்வளவு தெரியுமா? எட்டு வருஷங்கள். 200 பக்க அளவுள்ள இந்த நாவலை துணியில் பூ வேலைப்பாடு செய்வது போல அத்தனை நுட்பமாக, வசீகரமாக எழுதியிருக்கிறார்.
’அவார்’ இனத் தலைவன் முராத். ரஷ்யர்களிடம் இருந்து விடுதலைப் பெறப் போராடும் ஒரு போராளி. மிகவும் துணிச்சலும் தைரியமும் கொண்டவன். மக்கள் அவனை வழிகாட்டியாக கொண்டாடுகிறார்கள். அதிகாரத்தின் கொடுங்கரங்களால் வீழ்த்தப்பட்டபோதும், போராளிகள் அடிபணிந்து போவது இல்லை. மரணம் அவர்களை வெற்றிக் கொள்ளமுடியாது. வீழ்த்தி சிரிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
டால்ஸ்டாயின் மேதமை அவரது கடைசி நாவலிலும் பூரணமாகவே வெளிப்பட்டுள்ளது. இந்த நாவலை வாசிக்கும்போது ’உமர் முக்தார்’ திரைப்படம் ஏனோ நினைவில் வந்தபடியே இருந்தது. பிரம்மாண்டமான யுத்த திரைப்படங்கள் உருவாக்க முடியாத நெருக்கத்தை வாசகனுக்கு முழுமையாக உருவாக்கி தருகிறது என்பதே இந்த நாவலின் வெற்றி.
Be the first to rate this book.