பஞ்ச பூதங்களின் கூட்டுத்தன்மையால் அலையும் துகளுமாக இயங்கிவரும் இந்த உலகம் போன்றே, மனிதரான நம்முடைய உடலும் பேரியற்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒழுங்குசெய்யப்பட்ட ஓர் பிரபஞ்ச விதி அனைத்து உயிர்களிலும் ஆற்றலாக சுடர்கிறது. அண்டமும் பிண்டமும் அடிப்படையில் ஓரே விழைவிலிருந்து பிறந்தவை. ஒவ்வொரு மனிதரும் இந்தப் பிரபஞ்சத்தின் உயிருள்ள பருவடிவம். ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு மானுட சமூகத்தின் தன்னிச்சையான அறிவுத்தொடர்ச்சி எங்கோ அறுபட்டிருக்கிறது. அதனால்தான், மிகச்சிறிய நெருக்கடிகள்கூட மனிதரை மிகுதியாக அச்சுறுத்துகிறது. இதற்குக் காரணம், ஒன்றைக் கையாளும் சுயஞானத்தை வாழ்வின் ஏதோவொருபுள்ளியில் நாம் விரும்பியோ விரும்பாமலோ கைவிட்டிருக்கிறோம். முதல் தலைமுறை செய்கிற பிழை அடுத்தடுத்து நீள்கிறது. வாழிடச் சூழ்நிலையோடு இயைந்த மருத்துவ அறிவு என்பது பூமியில் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. ஏதேனும் காயம்பட்டால் பாதையில் வளர்ந்திருக்கும் செடியின் இலையைப் பறித்துக் கசக்கி, எச்சிலைத் தொட்டு காயத்தின் மீது வைத்துவிட்டு போகுமளவுக்கு கிராமத்து வைத்தியமுறைகள் எளிமையானவை. வெட்டுக்காயப் பச்சிலை அவ்வாறுதான் இன்றளவும் பாதைமருந்தாக நமக்குக் கிடைக்கிறது. நம்மைச்சுற்றி வளர்ந்துள்ள தாவரங்கள் மற்றும் எளிமையாகக் கிடைக்கும் மருந்துப் பொருட்களின் மருத்துவப்பயனை அறிந்துவைத்திருப்பது பலவித நல்விளைவுகளை உடலுக்கும் மனதுக்கும் உருவாக்கும். நம்மால் பிறருக்கும் நலம் நிகழும். நலம்நிறைந்த வாழ்வுக்கு மிகவும் அவசியமான 108 மூலிகைகள், அவைகளின் பயன்கள் அடங்கிய ஓர் மூலிகைக் கையேடே ‘குணமடைக’ புத்தகம். மூலிகைகளின் ஒளிப்படங்கள் முழுவண்ணத்தில் அச்சாகியுள்ளதால் அவைகளை இனங்காண்பதற்கு இந்நூல் பெருந்துணைபுரியும். கிராமம், நகரம் என பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் வாழ்பவர்களுக்கான மூலிகை மருத்துவக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கும் வளர்ந்தோர்களுக்கும் எளிய வைத்தியவாசலாக இது அமைவுகொள்ள விழைகிறோம். குக்கூ நிலத்தின் நற்சூழமைவுக்குள் தன்னை வைத்தியனாகக் கரைத்துக்கொள்ளும் தோழமை முத்து வெங்கட் தொகுத்த முதல் மருத்துவநூல் இது. தன்னறம் நூல்வெளி வாயிலாக இந்நூல் புத்தகமடைந்தது நினைவகலா ஓர் பேரனுபவம். நெஞ்சுக்கு அணுக்கமான தோழமை பாரதியின் திருமண தினத்தில் ‘குணமடைக’ நூல் எல்லோர் கைகளிலும் சென்றுசேரவுள்ளதால், இன்னும் கூடுதலாக இதில் அகநிறைவு அடைகிறோம். அவ்வகையில் இந்நூல் ஓர் பிரார்த்தனை வடிவம்! பெருநோய் எனக் கருதி நாம் அஞ்சுக்கூடியதை, அருகிருக்கும் சிறுசெடியின் ஓரிரு இலைகள் குணப்படுத்தக் கூடும். ஆம், அத்தகைய எளிய உண்மைகளால் ஆனதே இவ்வுலகு. யாதும் குணமடைக!
Be the first to rate this book.