குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்நூல் மேலும் ஒரு முக்கியமான நூலாகும். இந்நூல் மிகவும் விரிவான அளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி. ஸ்ரீகுமார், குஜராத் மாநில காவல்துறை, உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அவரது திறமை மற்றும் நேர்மைக்காக அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவர் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் நடந்த சமயத்தில் உண்மையான அறிக்கைகளை அளித்தார் என்பதற்காக நரேந்திர மோடி தலைமை தாங்கிய குஜராத் பாஜக அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம்தான் அவரை டிஸ்மிஸ் செய்யப்படுவதிலிருந்து, காத்து, அவர் ஓய்வுபெற்றபின் அவருக்கு காவல்துறைத் தலைவர் பணியில் பதவி உயர்வு அளித்தது. இந்தப்புத்தகம் மிகவும் விரிவான அளவில் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
- ஏ. ஜி. நூரானி
குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும் நூலில் எழுதியிருக்கிறார். மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரமும் காவல் துறையும் சுயலாபத்துக்காக ஆட்சியாளர்களின் மதச்சார்பு நோக்கங்களுக்கு இரையானதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டதையும் அப்பாவிகள் அரசிடம் உதவி கேட்டுக் கதறியும் ஆட்சியாளர்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மதக் கலவரங்கள் நடந்தால் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை கள் காற்றில் பறக்கவிடப்பட்டதையும், கலவரக்காரர்களை ஒடுக்காமல் பாராமுகமாக இருக்க அறிவுறுத்தப்பட்டதையும் நினைவுகூர்ந்திருக்கிறார். கலவரம் மட்டுமல்லாமல் கொள்ளை, சூறை யிடல், போலி என்கவுன்டர்கள் என்று எல்லாவற்றின்போதும் சொந்த லாபத்துக்காக மூத்த அதிகாரிகள் - அதில் சிலர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் - ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக நடந்ததை மனம் நோகும் வகையில் பதிவுசெய்திருக் கிறார். இனியொரு கலவரம் நிகழ்ந்தால், அரசு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல பரிந்துரைகளை அளித்திருக்கிறார். வகுப்புக் கலவரங்கள் ஒரேயொரு கட்சிக்குத்தான் என்றில்லை, பல கட்சிகளுக்கும் அரசியல் ஆதாயம் தருபவைதான். மக்களும் நேர்மையான அதிகாரிகளும் கைகோத்தால் இவற்றைத் தடுத்து விடலாம். கனத்த இதயத்துடன் படிக்க வேண்டிய புத்தகம்.
- சாரி
Be the first to rate this book.