இந்திய தேசத்தில் வணிகம் செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் நினைவிலும் பேச்சிலும் நீங்காமல் நிறைந்திருப்பது ஜி.எஸ்.டி.!
ஒரே தேசம்... ஒரே வரி... ஒரே சந்தை... என்ற முழக்கத்துடன் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துவிட்டது `சரக்கு மற்றும் சேவை வரி’ என்ற ஜிஎஸ்டி.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் வரி பற்றிய சிந்தனை மற்றும் பேச்சு மக்களிடையே மேலோங்கியிருக்கும். அதுவும் பட்ஜெட்டில் போடப்படும் புதிய வரிவிதிப்புகளால் தொழில் செய்வோர் மட்டுமின்றி, தங்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுமோ என்று நுகர்வோராகிய பொதுமக்களும் கவலைப்படுவது சகஜம்.
அதுபோலவே, 2000-வது ஆண்டிலிருந்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துவிட்ட ஜிஎஸ்டி-யின் சாதக, பாதக அம்சங்களை அறிந்து கொள்ள வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. `அறிவோம் ஜிஎஸ்டி’ என்ற பகுதியை `தி இந்து’ நாளிதழின் வணிகப் பகுதியில் அறிமுகப்படுத்தியபோது, வந்து குவிந்த கேள்விகளும் இதை உறுதிபடுத்தியது.
அதுமட்டுமல்ல... இதற்கென்றே தி இந்து தமிழ் நாளிதழ் பல்வேறு நகரங்களில் நடத்திய பயிலரங்கத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களை முன் வைத்தனர். அரசுத் துறை அதிகாரிகள், ஆடிட்டர்களுடன் ஜி.எஸ்.டி. குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்ட மற்றபல வல்லுநர்களும், இந்த பயிலரங்கத்தில் அற்புதமான விளக்கங்களை அளித்தனர். அதில் முக்கிய மானவர் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவரான எஸ்.இரத்தினவேல். அவர் G.S.T - யின் Brand Ambassador ஆகவே செயல்படுகிறார். வணிகம் மற்றும் வரி விதிப்பு குறித்து அவருக்கு இருக்கும் நீண்ட கால அனுபவம் அந்த பயிலரங்கம் தாண்டி, தமிழகத்தின் அனைத்து வணிகர்களுக்கும் பயன் தர வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாகப் பிறந்ததே இந்தப் புத்தகம்.
எஸ்.இரத்தினவேல் எழுதி அளித்திருக்கும் `ஒரு வணிகனின் பார்வையில் ஜிஎஸ்டி’ என்ற இந்தப் புத்தகம், ஜிஎஸ்டி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் கேள்வி - பதில் பாணியிலேயே அமைந்திருப்பது தனிச் சிறப்பு. ஜிஎஸ்டி குறித்த இவரது புதிய படைப்பு ஒருமுனை வரி விதிப்பில் நிலவும் சந்தேகங்களை நிச்சயம் போக்கும்.
Be the first to rate this book.