அந்தோனியோ கிராம்சி (1891-1937) இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவர் சிந்தனையாளர்களில் ஒருவர், இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். பாசிசச் சூழல்களில் இத்தாலியில் பணிபுரிந்தவர்.
இத்தாலியில் முசோலியின் ஆட்சி அவருக்கு 20 அண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை விதித்தது.சிறைக்குள் முதுகெலும்பு முறிந்து நீண்டகாலம் படுக்கையிலேயே கழித்தார்.12 ஆண்டுகள் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் மரணமடைந்தார்.
சிறைக்குள் கிராம்சி எழுதிய தத்துவ அரசியல் குறிப்பேடுகள் "சிறைக்குறிப்பேடுகள்" (Prison Notebooks) என்ற தலைப்பில் அவரது மரணத்திற்குப் பிறகு வெளியாயின. 30 குறிப்பேடுகள், 3000 பக்கங்கள். அவை மார்க்சியம்,இத்தாலிய வரலாறு, பாசிசம் ஆகியவை குறித்தவை.
மார்க்சிய சிந்தனைக்கு கிராம்சியின் முக்கியப் பங்களிப்புகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
பொருளாதார நிர்ணயவாதத்திலிருந்து மார்க்சியத்தை விடுவித்து நெகிழ்வான செறிவான சூழலுக்குள் அதனை வழிநடத்தினார்.
பொருளாதார அரசியலுக்கு இணையாக மார்க்சியத்தின் பண்பாட்டு அரசியலுக்கு இடமளித்தார்.
முதலாளிய வர்க்கம் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக பொருளாதாரம், அரசியல், வன்முறை ஆகியவற்றை மட்டுமின்றி குடும்பம், கல்வி, மதம் போன்ற கருத்தியல் நிறுவனங்களையும் பயன்படுத்துகிறது வெகுமக்களின் கருத்தியல் பொதுப்புத்தி (Common Sense) எனும் வடிவில் அதனைப் பரப்புகிறது.
வட இத்தாலியின் தொழிலாளர்கள், தென் இத்தாலியின் விவசாயிகள் ஆகிய மக்கள் பகுதியினர் இணைந்த தேசிய வெகுமக்களியக் கூட்டணிக்கு கிராம்சி முன்னுரிமை வழங்கினார்.
உழைக்கும் வர்க்கங்களிலிருந்து தோன்றும் சொந்த அறிவாளிகள் (Organic Intellectual) புரட்சிகர அரசியலில் முனைப்பு காட்ட வேண்டும் என்பதை கிராம்சி வலியுறுத்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியில் இன்னும் உருவாகாத சூழல்களில் ரஷ்யாவில் சோவியத்துக்கள் உருவாக்கப் பட்டது போல, இத்தாலியிலும் தொழிலாளர்கள் சோவியத்துகளை (Workers' Soviets) உருவாக்குவதில் அந்தோனியோ கிராம்சி ஆர்வம் காட்டினார்.
எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே! என்ற லெனினிய கோஷத்தை மீண்டும் ஒலிக்கச் செய்தார். 1921-ல் முற்றிலும் ஒரு லெனினியக் கட்சியாக இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்.
கிராம்சியைப் பயன்படுத்துதல் எனும் இந்நூல் ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இயலும் ஒவ்வொரு கருத்தாக்கத்தை விரிவாகப் பயிலுகிறது அவை,
கருத்தியல் (Ideology)
தனியாள் (The Individual)
கூட்டு உயிர்மங்கள் (Collective Organisms)
சமூகம் (Society)
நெருக்கடிகள் (Crises)
காலச் சார்பு (Temporality)
Be the first to rate this book.