அந்தோனியோ கிராம்ஷி தமிழகத்திற்கு குறைந்தளவே அறியப்பட்டவர். அதுவும் நாடாளுமன்ற சீர்திருத்தவாதியாக, பண்பாட்டு மார்க்சியராக, விளிம்பு நிலை மக்களின் ஆதரவாளராக, இன்னும் மோசமாக வெட்டிக் குறுக்கி பின் நவீனத்துவத்தின் தந்தையாகவுமே அறியப்பட்டார். அல்லது அறிமுகப்படுத்தப்பட்டார்.
அண்மையில் வெளிவந்துள்ள "கிராம்ஷியின் புரட்சியின் இலக்கணம்' இவர் மீதான அவதூறுகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. உயிரோட்டமுள்ள மார்க்சியவாதியாக, போராளியாக, சிந்தனையாளராக அவரின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கிறது. லெனின், ஸ்டாலின், த்ரோத்ஸ்கி, புகாரின், ஜினோவீவ், காமனோவர் போன்ற போல்சுவீக் தலைவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் மட்டுமல்ல, இக்காலத்தில் நிலவிய அகிலத்தின் அதிகார அரசியல் போக்கையும், இலெனினுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி மோதல்களையும் கடும் திறானய்வுக் கொண்டவருமாவார்.
மேலும் மார்க்சியத் தத்துவத்தை நடைமுறையுடன் இணைப்பதற்கான முயற்சிகளில் அதிகம் சிந்தித்தவர். பொருளுற்பத்தி, அரசியல், பண்பாடு ஆகிய அனைத்து நிலைகளிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ "தொழிற்சாலை கவுன்சில்கள் இயக்கம்' தேவைக் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் இயங்கு முறைகள், உண்மையான பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தை எப்படி நடைமுறைகளுக்கு பயனுள்ளதாக மாற்றுவது, கருத்து நிலை மேலாண்மை, குடிமைச் சமூகம் பற்றியும், தொழிலாளர் உழவர் நேச அணிகள் பற்றியும் புதிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார்.
மற்றும் மார்க்சியத்தை சொந்த நாட்டு அனுபவத்துடன் பொறுத்திக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தினார். குறிப்பாக அரசியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு ஆகிய ஆய்வு முறைகளை தனது சேதமான இத்தாலியின் சிறப்புக் களோடு எப்படிப் பொறுத்திக் கொள்வது இதனடிப் படையில் இத்தாலிக்கான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது, இதன் சூழலுக்கேற்ப புரட்சியை வழி நடத்துவது தொடர்பான இவரின் சிந்தனைகள் இக்காலச் சூழலுக்கு நிறையவே பொருத்த முடையதாக இருக்கிறது.
ஐந்தடிக்கும் குறைவான கூனரான கிராம்ஷியை எப்போதும் கொடிய நோய்கள் சூழ்ந்தே இருந்தன. இந்நிலையில் முசோலினியின் பாசிச அரசு இவருக்கு 20 ஆண்டுகள், 4 மாதங்கள் 5 நாட்கள் சிறை தண்டனை வழங்கியது. மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால் இவரின் விடுதலைக்கு வாய்ப்பிருக்கின்ற சூழலில் மன்னிப்புக் கடிதம் தற்கொலைக்கு சமம் என்று கூறி அதை மறுத்தார். ஐந்தாண்டுகளுக்கு மேலான பாசிச சிறையும், கொடிய நோயும் இவரின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கத் தொடங்கி விட்டன. 46 வயது வயதிலேயே மரணம் அவருக்கு ஓய்வைக் கொடுத்து விட்டது. இந்த இளம் வயதின் மரணம் உயிரோட்டமுள்ள அவரின் புரட்சிச் சிந்தனைக்கு முழுமைப் பெரும் வாய்ப்பை வழங்கவில்லை. இருந்த போதிலும் சிறைக் குறிப்புகளாக இருக்கம் அவரின் சிந்தனையின் சிறதல்கள் "புரட்சியின் இலக்கணம்தான்'.
Be the first to rate this book.