கிராமிய மேம்பாடு நிபுணத்துவம் மிக்க பணி. இதைச் செய்வதற்குக் கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிபுணத்துவமும் வேண்டும்.
க. பழனித்துரை எழுதியிருக்கும் இந்த நூல், ஒரு கிராம ஊராட்சி அரசாங்கம் எப்படி நிருவகிக்கப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் ஓர் அரிய கையேடு.
உள்ளாட்சியின் அடிப்படைத் தத்துவங்களையும் இன்றைய கிராம வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம், தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சிச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் போன்றவற்றையும் இந்தக் கையேட்டின் முதல் இரண்டு பகுதிகள் விவரிக்கின்றன.
கிராம ஊராட்சி செயல்படும் போது மக்களைப் பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றி, அவர்களை ஆளுகையிலும் மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்க வைப்பதன் மூலம், ஒரு கிராம மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கமாக மாற்றுவது குறித்து மூன்றாவது பகுதி பேசுகிறது. இதில் மிக முக்கியமானது கிராமங்களைத் தற்சார்பும் தன்னாட்சியும் உடையதாக எவ்வாறு உருவாக்கலாம் என்பதை விளக்கியுள்ளதுதான்; இன்றைய சூழலில் செலவில்லாப் பணிகள் பல செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் விவரிப்பது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றது. இவை அனைத்தும் தலைவரால் மட்டும் செய்யப்படுவதல்ல, மக்களின் பங்களிப்போடு எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
இந்த மாதிரியான விளக்கக் கையேடு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உருவாக்கப்படவில்லை. இப்படி ஒரு கையேட்டை உள்ளாட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல, கிராம மேம்பாட்டில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
-- எஸ். எஸ். மீனாட்சி சுந்தரம்,
மேனாள் மத்திய அரசுச் செயலர்,
ஊரக வளர்ச்சி அமைச்சகம்,
இந்திய அரசு
Be the first to rate this book.